எதிர்பார்ப்பில்தான் பாஜகவுக்கு வந்தேன்.. இதுவரை பொறுப்பு ஏதும் தரவில்லை.. விஜயதாரணி ஆதங்கம்!

Manjula Devi
Aug 26, 2024,10:23 AM IST

புதுடெல்லி:   பாஜக அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியும் எனக்கு இதுவரை எந்த  பதிவையும் கொடுக்கவில்லை. அதேசமயம், என்னை மாதிரியானவர்களின் பணியை நிச்சயம் பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் எம்எல்ஏ  விஜயதாரணி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


காங்கிரஸ் சார்பில் மூன்று முறை விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்ததவர் விஜயதாரணி. பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜகவோடு இணைந்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரவில்லை. அதேபோல,  விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.




கட்சியிலும் பதவி ஏதும் தரப்படாமல்தான் உள்ளார். இந்த நிலையில் பாஜக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன், விஜய்தாரணி ஆகியோர் பங்கேற்றனர். 


கூட்டத்தில்  பேசிய விஜயதாரணி கூறுகையில்,  நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் இரண்டு வருடம் பதவிக்காலம் உள்ளது. இருக்கிறதையும் விட்டுட்டு எதிர்பார்ப்போடு தான் பாஜகுக்கு வந்தேன். நல்லா உழைக்கணும் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும். அதற்கு என்ன தேவை என்றால் பதவி. 


ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் எந்த பதவியும் வழங்கவில்லை. பரவாயில்லை நிச்சயமாக என்னை போன்றவர்களின் பணியை பாஜக பயன்படுத்தும் என நம்புகிறேன் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, எல்லோருக்கும் ஏற்புடைய சிவில் கோடை அமைக்க வேண்டும் என பிரதமர் தெளிவாக கூறியிருக்கிறார். இதை நம்பித்தான் நான் பாஜகவுக்கே வந்தேன் என்று கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்