சட்டசபைத் தலைவர் பதவி இல்லை.. எம்.பி. சீட்டுக்கும் வாய்ப்பில்லை.. விஜயதாரணியின் 2 வருஷ புழுக்கம்!

Su.tha Arivalagan
Feb 19, 2024,05:24 PM IST

நாகர்கோவில்: சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்குத் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது கடைசி வரை கிடைக்கவேயில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் எம்.பி. சீட்டாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு விட்டதாம். இதனால்தான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக விஜயதாரணி எம்எல்ஏ முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.


மேலும் கடந்த 2 வருடமாகவே அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும், கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜயதாரணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரளவுக்கு நல்ல முகம் இருப்பதால், அவரைப் பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்பியதால்தான் தற்போது அவர் பாஜகவுக்குப் போகப் போவதற்கான காரணமாக கூறப்படுகிறது.


மறைந்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்திதான் விஜயதாரணி. விளவங்கோடு சட்டடசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.  அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.




விளவங்கோடு தொகுதியிலிருந்து 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. கட்சியில் இதைத் தாண்டி பெரிய அளவிலான பதவி அவருக்குத் தரப்படவில்லை. இது விஜயதாரணிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலிருந்தே அவர் தீவிர காங்கிரஸ்காரர். ஆனாலும் பெரிய அளவில் பதவியை எதிர்பார்த்த அவருக்குக்  கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.


மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. சரி, கன்னியாகுமரி தொகுதியிலிருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் தற்போதைய எம்.பி. விஜய் வசந்த்தே மீண்டும் அங்கு போட்டியிடப் போவதாக கூறி விட்டார்களாம். அதை விட முக்கியமாக அடுத்த சட்டசபைத் தேர்தலில்  விளவங்கோட்டில் போட்டியிடவும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற தகவலும் அவருக்கு எட்டியுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடந்தார் விஜயதாரணி.


இப்படி அடுத்தடுத்து ஏமாற்றங்கள் கூடிக் கொண்டே போன நிலையில்தான் பாஜக இவருக்கு வலை வீசியதாம்.  கன்னியாகுமரியைப் பொறுத்தவரை பாப்புலரான லீடர் ஒருவருக்காக பாஜக காத்திருக்கிறது. பொன். ராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர். இந்த நிலையில் விஜயதாரணி வந்தால் அந்த பரபரப்பை வைத்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பாஜக கருதுகிறதாம். இதனால் விஜயதாரணிக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது.


அதேசமயம், இந்த முறையும் பொன் ராதாகிருஷ்ணனுக்கே டிக்கெட் தர வேண்டும் என்ற கோரிக்கைய அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதால், விஜயதாரணிக்கு எம்.பி சீட் தரப்படுமா அல்லது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படுமா என்ற குழப்பமும் நிலவுகிறது. இருப்பினும், முதலில் கட்சியில் சேரட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்


இதற்கிடையே, விஜயதாரணி கட்சியை விட்டுப் போவதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று கன்னியாகுமரி காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸால்தான் விஜயதாரணிக்குப் பெயர் கிடைத்தது. அவரால் கட்சி இங்கு வளரவில்லை. கன்னியாகுமரியில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. விஜயதாரணி போவதால் அவருக்குத்தான் நஷ்டம், அவரால் வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார்கள்.


இதேபோலத்தான் 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பும் விஜயதாரணி பரபரப்பைக் கிளப்பினார். பாஜகவில் சேரப் போவதாக வதந்திகள் கிளம்பின. பாஜகவும் கூட அவருக்கு விளவங்கோடு சீட்டையேக் கொடுத்து நிறுத்தவும் தயாராக காத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு அதே தொகுதியில் சீட் கொடுத்து விட்டதால், விஜயதாரணி பாஜக பக்கம் போகவில்லை என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.