திரையில் தோன்றிய அப்பா.. மெய் சிலிர்த்துப் போன விஜய பிரபாகரன்.. ரசித்துப் பார்த்ததாக உருக்கம்!

Manjula Devi
Sep 12, 2024,05:11 PM IST

சென்னை: கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அப்பா தோன்றிய காட்சியை ரசித்துப் பார்த்தேன் என கேப்டன் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.


ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. இதில் விஜய் அப்பா மகன் என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். இவருடன் சினேகா, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, மோகன், உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதனை பூர்த்தி செய்யும் விதமாக படமும் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் கோட் படம்  இதுவரை 300 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.




குறிப்பாக கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI தொழில்நுட்ப மூலம் காட்சிப்படுத்தியதை அனைவரும் ரசித்தது மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர். கேப்டன் மறைந்தாலும் அவரின் நினைவு நம்மை விட்டு என்றும் மறையாது. அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்பதை நினைவு கூறும் வகையில் கோட் படத்தில் அவரை காட்சிப்படுத்தியதை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதிலும் விஜயகாந்தை மீண்டும் திரையில் பார்ப்பதற்காகவே கேப்டனின் ரசிகர்களும் இப்படத்தை  ஆவலுடன் பார்த்து வருகின்றனர். 


இந்த நிலையில் கோட் படத்தை விஜயகாந்ததின் மகன் விஜய பிரபாகரன் பார்த்து ரசித்துள்ளார். குறிப்பாக அவரது தந்தை விஜயகாந்த் வரும் காட்சியைப் பார்த்து நெகிழ்ந்து விட்டாராம். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு தனியாக ஸ்பெஷல் போட்டுக் காட்டுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்த நிலையில் கோட் படம் பார்த்தது குறித்து விஜய பிரபாகரன் கூறுகையில், AI தொழில்நுட்பம் மூலம் அப்பாவை காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் தோன்றிய காட்சியை வெங்கட் பிரபு நன்றாக இயக்கியிருக்கிறார். கோட் படத்தில் அப்பா தோன்றிய காட்சியை ரசித்துப் பார்த்தேன் என கூறியுள்ளார்.




விஜய பிரபாகரனின் தம்பி சண்முகப் பாண்டியன் தற்போது இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் சரத்குமாரும் முக்கியப் பார்த்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தேனியில் நடந்து வருகிறது. இதனால் ஷூட்டிங்குக்கு வந்த இடத்தில் தேனியில் வைத்து  அங்குள்ள வெற்றி தியேட்டரில் கோட் படத்தை தனது தம்பியுடன் இணைந்து பார்த்தார் விஜய பிரபாகரன். அவருடன் நடிகர் சரத்குமார், இயக்குநர் பொன்ராம் ஆகியோரும் படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். சண்முகப் பாண்டியன் படத்தில் வரும் போலீஸ் சீருடையிலேயே அவர் படம் பார்க்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் விஜயகாந்த் குடும்பத்தினரையும் கோட் படத்தில் இடம் பெற்ற விஜயகாந்த் காட்சிகள் கவர்ந்து விட்டது தெரிய வருகிறது.



இதன் மூலம் விஜயகாந்த் குடும்பத்தினரையும் கோட் படத்தில் இடம் பெற்ற விஜயகாந்த் காட்சிகள் கவர்ந்து விட்டது தெரிய வருகிறது. விஜயகாந்த் காட்சிப்படுத்திய விதம் சரியில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக சிலர் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். ஆனால் விஜய பிரபாகரன் முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் விஜயகாந்த் குடும்பத்தினரும் இந்தக் காட்சியமைப்பு குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்