தமிழன் பட ஸ்டைலில்.. இலவச சட்ட மையம்.. விஜய்யின் அட்டகாசமான டாஸ்க்!
சென்னை : தான் நடித்த தமிழன் பட ஸ்டைலில் இலவச சட்ட மையம் திறக்க முடிவு செய்துள்ள விஜய், முதல் கூட்டத்திலேயே வழக்கறிஞர்களுக்கு அசத்தலாக டாஸ்க்கும் கொடுத்துள்ளார். இதன் மூலம் வலுவான அரசியல் என்ட்ரிக்கு விஜய் தயாராகி வருகிறார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தனது அரசியல் என்ட்ரிக்கான வேலைகளை செய்து செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக இலவச ரத்த தான மையங்கள், இலவச உணவு மையங்கள், இலவச கல்வி மையங்கள் ஆகியவற்றை சமீபத்தில் துவக்கினார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் குழு மாவட்டம் தோறும் அமைக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதில் பலரும் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
இந்த வழக்கறிஞர்கள் குழுவின் ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்தள்ள சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் பிஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்த குழுக்கள் கட்சிக்கு உதவுவதற்காக மட்டுமல்ல மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் தான் துவங்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வழிகாட்டுதலின் படி இலவச சட்ட ஆலோசனை மையங்கள் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட உதவி தேவைப்படுவோருக்கு இதன் மூலம் உதவிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் தற்போது வெளிநாட்டின் விடுமுறைக்காக சென்றுள்ளதாக தெரிவித்த அவர், வழக்கறிஞர்கள் குழுவின் டாஸ்க் ஒன்றையும் வழங்கி உள்ளார். அதாவது,
* மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றை மாவட்ட தலைவர்களுக்கு தெரிப்படுத்த வேண்டும். தகவல் அறியம் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெற்று தொகுக்க வேண்டும்.
* பொதுநல வழக்குகள் பதிவு செய்யும் வழக்கறிஞர்களின் தகவல்களையும், அவர்களது வழக்குகளின் நிலை குறித்து கண்காணிக்க வேண்டும்.
* தமிழக மக்களின் உரிமையை காக்கும் வழக்குகளில் மனுதாரராக இணைந்து அந்த வழக்கின் மூலம் மக்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
* இயக்க நிர்வாகிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்படும் வழக்குகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க குழுக்கள் அமைக்க மாவட்ட தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
* மக்கள் இயக்க நிர்வாகிகளின் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து தர முயற்சிக்க வேண்டும்.
* உறுப்பினர்களுக்கு அடிப்படை சட்டங்கள் சொல்லித்தர வேண்டும். சமூக வலைதள பதிவுகளினால் போடப்படும் சைபர் கிரைம் வழக்குகளிலும் உதவ வேண்டும்.
* அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது போடப்படும் வழக்குகளுக்கு விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணியினர் சட்ட உதவிகள் செய்திட வேண்டும்.