தப்பு தப்பு.. வாயில அடி.. இப்பவே இவ்வளவு ஸ்டிரிக்ட்டா இருக்கே விஜய் மக்கள் இயக்கம்!
சென்னை : விஜய் மக்கள் இயக்கம் இப்போதே கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஸ்டிரிக்ட்டான முறையில் ஒரு அரசியல் அமைப்பாக மலர்ந்து வருவதாக ரசிகர்கள் பெருமையுடன் சொல்லி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு விஜய் தயாராகி வருகிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக ஃபேஸ் ஸ்கேனிங் செய்வதற்கு சமீபத்தில் தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிற்கு சென்று வந்தார்.
மற்றொரு புறம் அரசியல் என்ட்ரிக்கும் விஜய் தயாராகி வருகிறார். இதற்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்சி ஆனந்த், கட்சியின் ஒவ்வொரு குழு உறுப்பினர்களையும் அழைத்து பேசி வருகிறார். சமீபத்தில் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் மகளிர் குழு உறுப்பினர்களை அழைத்து புஸ்சி ஆனந்த் உரையாடினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், நான் விஜய்யின் அதிதீவிர ரசிகை என்று சொல்லி பேச துவங்கினார். அப்போது குறுக்கிட்ட புஸ்சி ஆனந்த், இனி மேல் நம்முடைய தலைவரை யாரும் பேரை சொல்லி குறிப்பிட வேண்டாம். இனி வரும் காலத்தில் அவரை தளபதி என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார்.