நெல்லையில் விஜய்.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு நேரில் உதவி!
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு நடிகர் விஜய் இன்று நேரில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் சமீபத்தில் வரலாறு காணாத கன மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது. இதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்தான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யும் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவிகளை வழங்கியுள்ளார்.
இதற்காக அவரே இந்று காலை நேரடியாக நெல்லை வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை வந்து சேர்ந்த அவர் விழா நடந்த கல்யாண மண்டபத்திற்குள் வரவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெள்ளம் போல திரண்டு விட்டனர். இதனால் மண்டபத்தின் பின்வாசல் வழியாக உள்ளே வந்தார் விஜய்.
அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு விஜய் தனது கையால் உதவிகளை வழங்கினார். பலர் விஜய் காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினர். தாமிரபரணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இடிந்து விழுந்த காட்சியை அனைவரும் பார்த்தோம். அந்தக் குடும்பத்துக்கும் விஜய் உதவியை அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், நிதியுதவி என பல வகையான உதவிகளை விஜய் வழங்கினார். அனைவரும் அமர வைக்கப்பட்டு விஜய்யே ஒவ்வொருவரிடமும் நேரில் சென்று பொருட்களைக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவுக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அதில் 21 வகையான பதார்த்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அடுத்து சென்னையிலும் இதேபோல வெள்ள நிவாரண உதவிகளை விஜய் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.