நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய்யிடம் அடுத்தடுத்து தெரியும் மாற்றங்கள் அவரது கட்சியினருக்கு உற்சாகத்தைத் தருவதை விட எதிர்த் தரப்புக்குத்தான் பெரும் அல்லு விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே திராவிடம் வேரூண்றி வலுவாக உள்ளது. அதை எதிர்த்து வலது சாரிகள் தரப்பிலும் இப்போது வலுவாக போட்டியைக் கொடுத்து வருகின்றனர். கம்யூனிசம் இருக்கிறது. இப்படி எல்லா இசங்களும் கொள்கைகளும் வலுவாக உள்ள நிலையில் இதைத் தாண்டி விஜய் என்ன சாதித்து விடப் போகிறார், அவருடைய பாதை என்ன என்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. விவாதமாக வெடித்துக் கொண்டுள்ளது.
விஜய் இதுவரை தனது கட்சியின் நோக்கம், கொள்கை, இலக்கு என்ன என்பதை தெரிவிக்கவில்லை. மாறாக அக்டோபர் 27ம் தேதி நடைபெறப்போகும் விக்கிரவாண்டி மாநில மாநாட்டில்தான் எல்லாவற்றையும் விளக்கமாக தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளார். எனவே அதுவரை நாம் அமைதி காத்துதான் ஆக வேண்டும். அது தெரியும் வரை விஜய்யைப் பற்றி பிம்பத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, நியாயமாகவும் அது இருக்காது.
ஆனால் விஜய் மறைமுகமாக தன்னைப் பற்றிய ஒரு யூகத்தை வடிவமைத்துக் கொண்டே இருக்கிறார். மெல்ல மெல்ல உருவாகி வரும் அந்த பில்டப், அரசியல் வட்டாரத்தில் சரியான அதிர்வுகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது. காரணம், பெரிய அளவிலான ஹைப்கள் எப்போதுமே ஆபத்தானவை. அதற்குப் பதில் நிதானமான அதிர்வலைகள் நல்லது.. இதை உணர்ந்துதான் விஜய் தரப்பு அந்த பாணியில் ஒவ்வொரு படிக்கட்டாக ஏறி வந்து கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் அவரை பாஜக பி டீமாக பலரும் வர்ணித்து வந்தனர். ஆனால் விஜய்யே அதை நீட் குறித்த பேச்சின் மூலம் உடைத்து சுக்குநூறாக்கினார். அவரை அதுவரை பாஜக பி டீமாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இல்லை இல்லை விஜய் நம்மாளுதான் போல என்று மாற்றிப் பேச ஆரம்பித்தனர். மாறாக பாஜகவினர், விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவர் போட்ட எக்ஸ் தளப் பதிவும் பெரியார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியதும் மிகப் பெரிய பேசு பொருளானது. அவரது இந்த செயல்களால் பாஜக தரப்புதான் அதிகமாக அதிருப்தி காட்டியது. திமுகவினரோ இதை பெரிதாக கொண்டாடவும் முடியாமல் அதே சமயம், இதை வரவேற்காமல் இருக்கவும் முடியும் இரு தலைக் கொள்ளி எறும்பு போலானார்கள்.
இந்த நிலையில் இப்போது இன்னொரு அதிரடியைக் காட்டியுள்ளார் விஜய். அதாவது இதுவரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் லெட்டர் பேடில் இடம் பெற்றிருந்த விஜய் படத்தில் அவரது நெற்றியில் குங்குமப் பொட்டு இடம் பெற்றிருந்தது. தற்போது அந்த படத்தை மாற்றி விட்டு வேறு படம் போட்டுள்ளனர். அந்த விஜய்யின் நெற்றியில் பொட்டு கிடையாது. வெறும் நெற்றியாகத்தான் உள்ளது. முழுமையான பெரியார் தொண்டனாக விஜய் மாறி வருகிறாரா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
ஆனால் இதை இப்போது பாஜகவினர் விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் லெட்டர் பேடில் இப்போதுதான் படத்தை மாற்றியுள்ளனர். ஆனால் அவரது கட்சி அறிவிப்புகள் தொடர்பான கார்டுகளில் இடம் பெறும் விஜய் போட்டோக்களில் பெரும்பாலும் நெற்றிப் பொட்டு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ, விஜய் எது செய்தாலும் அது பேசு பொருளாகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்