"பறக்கும் பந்து பறக்கும்"... ஜாலியாக பேட்மிண்டன் விளையாடும் லாலு பிரசாத் யாதவ்!
Jul 29, 2023,12:13 PM IST
டெல்லி: சிறுநீரகப் பிரச்சினை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை, மத்திய புலனாய்வு அமைப்புகளின் தொடர் விசாரணை என தொடர்ந்து அழுத்தமான வாழ்க்கையில் இருந்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை அவரது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதாதள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு தற்போது 75 வயதாகிறது. அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் போட்டுள்ளன. அதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். தற்போது உடல் நலக் குறைவு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வெளியில் உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அவரது இளைய மகள் ரோஹினிதான் சிறுநீரகம் தானம் செய்துள்ளார். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு டெல்லி திரும்பிய லாலு அங்குள்ள தனது மூத்த மகள் மிசாவின் வீட்டில்தான் தங்கியிருந்தார். சமீபத்தில்தான் அவர் பாட்னா திரும்பினார். அதன் பின்னர் எதிர்க்கட்சிக் கூட்டணிக் கூட்டங்களில் ஆக்டிவாக பங்கேற்று வருகிறார்.
பாட்னா கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். தனது தந்தையை பல்வேறு வழிகளிலும் முடக்கப் பார்க்கிறது பாஜக. இதற்காக மத்திய புலனாய்வு ஏஜென்சிகளையும் அது ஏவி வருகிறது. ஆனால் அவரை முடக்க முடியாது என்று கூறி வருகிறார் தேஜஸ்வி யாதவ்.