எங்க பார்த்தாலும் "சீதா அக்பர்".. கொல்கத்தா ஹைகோர்ட்டுக்குக் கிளம்பி வந்த புது அக்கப்போர்!
கொல்கத்தா: நாடு முழுக்க நேற்று முதல் டிரண்டிங்கில் இருந்து வருகிறது "சீதா அக்பர்".. யாரோ காதல் ஜோடியோ என்று பலரும் முதலில் நினைத்தார்கள்.. ஆனால் பிறகுதான் தெரிந்தது.. இந்த மேட்டரே வேற!
இரண்டு சிங்கங்களின் (சோக) கதை இது. இந்த இரண்டு சிங்கங்களும் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில் ஒரே பகுதியில் அடைக்கப்பட்டுள்ளன. இதை வைத்து விஸ்வ இந்து பரிஷத் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது. அது எப்படி "சீதா" சிங்கத்தை, "அக்பர்" சிங்கத்துடன் இணைத்து ஒரே இடத்தில் அடைக்கலாம். "அக்பர்" சிங்கத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கொல்கத்தா ஹைகோர்ட்டில் விஸ்வ இந்து பரிஷத் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதுதான் நாடு முழுவதும் நேற்று முதல் பேசு பொருளாக உள்ளது. இதை வைத்து மீம்ஸ்களும் தூள் கிளப்பிக் கொண்டுள்ளன. சிங்கத்தில் கூடவா மதம் பார்ப்பீர்கள்.. நீங்கள் இப்படி மதம் பார்ப்பீர்கள் என்று அந்த சிங்கங்களுக்குத் தெரியுமா.. அட, என் பேரு சீதா.. உன் பேரு அக்பர் என்றாவது அந்த சிங்கங்களுக்குத் தெரியுமா.. இந்து என்று ஒரு மதம் இருக்கிறது, இஸ்லாம் என்று ஒரு மதம் உள்ளது என்றாவது இந்த அப்பாவி சிங்கங்களுக்குத் தெரியுமா.. பிறகு எதுக்குய்யா இப்படி பண்றீங்க என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில்தான் இந்த இரு சிங்க ஜோடியும் திரிபுரா மாநிலம் செபாஹிஜாலா உயிரியில் பூங்காவிலிருந்து சிலிகுரிக்கு மாற்றப்பட்டன. திரிபுரா பூங்காவில்தான் இந்த சிங்கங்களுக்கு சீதா என்றும் அக்பர் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் மேற்கு வங்கத்திற்கு வந்த பிறகுதான் இந்தப் பெயர்களை வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதை சிலிகுரி பூங்கா ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் ராமர். அவரது மனைவிதான் சீதா. அப்படிப்பட்ட புனிதமானவரின் பெயரை சிங்கத்துக்கு வைத்திருப்பது எங்களது மனதைக் காயப்படுத்தியுள்ளது. இது இந்துக்களின் உணர்வுகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். மேற்கு வங்க மாநில வனத்துறைதான் சீதா என்ற பெயரை வைத்துள்ளது. இதை உடனடியாக மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 20ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, "சீதா - அக்பர்" விவகாரத்தை வைத்து டிவிட்டரில் பலரும் மோதியும், ஆதரித்தும் பேசி வருகின்றனர்.