வெற்றிமாறன் சொல்வது போல.. ஜாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டுமா?

Baluchamy
Feb 06, 2023,09:45 AM IST
சென்னை: திராவிடம் இத்தனை காலமாக என்ன செய்தது.. இன்னும் ஜாதி ஒழியவில்லையே என்ற கேள்வியும் விமர்சனமும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. என்னதான் தமிழர்களின் சமூகநிலைமை மேலோங்க திராவிடம் காரணமாக இருந்தாலும் ஜாதிக் கொடுமையை அறவே ஒழிக்க திராவிடம் தவறி விட்டதாக ஒரு விமர்சனம் இருந்து கொண்டுதான் உள்ளது.



இந்த நிலையில்தான், பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என இயக்குநர் வெற்றி மாறன் சென்னையில் நடந்த தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

பொல்லாதவன் தொடக்கி, நடிகர் சூரி நடிக்கும் விடுதலை திரைப்படம் வரை தமிழ் சினிமாவில் பல அற்புதமான படங்களை கொடுத்து வருகிறார் இயக்குநர் வெற்றி மாறன். இவர் படைப்பில் உருவான ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்ளிட்ட படங்கள் பல தேசிய விருதுகளை வென்றது. சமூதாயத்தில் நிலவும் பல நிறை குறைகளை தனது படத்தின் மூலம் வெளிப்படுத்தி வரும் வெற்றி மாறன் சமீபகாலமாக பல்வேறு சமூக கருத்துக்களைக் கூறி வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம், விடுதலை கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், ராஜா ராஜா சோழனை ஹிந்துவாக மாற்ற முயல்கின்றனர் என வெற்றி மாறனின் பேச்சு பெரும் பரபரப்பைக் கிளப்பியது. வெற்றி மாறனின் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தாலும், சீமான் உள்ளிட்டோர் ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் மேடையில் பேசினார். அப்போது, நீங்கள் இயக்கும் படம் மற்றும் தமிழ்நாடு அரசு சமத்துவத்தை பற்றி பேசுகிறது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரியில் சாதி சான்றிதழை கேட்கின்றனரே என வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு வெற்றி மாறனின் பதில், நான் என்னுடைய மகனுக்கு சாதி அற்றவர் என்ற சான்றிதழை பெறுவதற்கு பல வழிகளில் முயற்சித்தேன், நீதிமன்றத்தை நாடினேன், அங்கேயும் நீங்கள் ஏதாவதொரு சாதி பெயர் போட்டுத்தான் ஆகவேண்டும் என கூறிவிட்டனர், பல முறையும் முயற்சித்தேன் தரவில்லை.

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழை கேட்பதை நிறுத்தவேண்டும் என நான் நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் உண்டு. ஒருவருக்கு சாதி சான்றுதல் வேண்டாம் என்றால் அது அவரின் தனிப்பட்ட  என்றார் வெற்றிமாறன்.

வெற்றி மாறன் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.. வாசகர்களே நீங்க என்ன நினைக்கிறிங்க.. உங்களோட கருத்துக்களையும் இங்கே பகிரலாம்.