50 ஆண்டு காலம்.. ஈழத் தமிழர் பிரச்சினை தீர பாடுபட்ட.. மூத்த தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்!

Su.tha Arivalagan
Jul 01, 2024,09:34 AM IST

கொழும்பு: இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவருமான இரா. சம்பந்தன் கொழும்பு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91.


ஈழத் தமிழர் வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் வந்து போயுள்ளனர். அவர்களில் இரா. சம்பந்தனும் முக்கியமானவர். ஈழப் போரின் கடைசிக் கட்டங்களில் இரா. சம்பந்தன் முக்கியப் பங்காற்றினார். இறுதிக் கட்ட போருக்குப் பின்னர் ஈழத்தில் அமைதி நிலவுவும், அங்கு சுமூகமான நிர்வாகம் நடைபெறும், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் பல்வேறு வழிகளில் பாடுபட்டவர் இரா. சம்பந்தன்.




91 வயதான இரா. சம்பந்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக செயல்பட்டவர். அதேபோல பல்வேறு தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் திகழ்ந்தவர் இரா. சம்பந்தன்.


சமீப காலமாக வயது மூப்பால் பல்வறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் இரா. சம்பந்தன். கொழும்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் காலமானார். 


இலங்கையின் திரிகோணமலையில் பிறந்தவரான இரா. சம்பந்தன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். மனைவி, 3 பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.  1977ம் ஆண்டு முதல் முறையாக திரிகோணமலை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2001ம் ஆண்டு பல்வேறு ஈழத் தமிழ் போராளிகள் அமைப்பினர் இணைந்து ஒரு புதிய அரசியல் கூட்டமைப்பை ஏற்படுத்தினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று அதற்குப் பெயரிடப்பட்டது. அதன் தலைவராக பொறுப்பேற்றவர் இரா. சம்பந்தன். கடைசி வரை அதன் தலைவராக இருந்த பெருமை அவருக்குரியது. 


அரசியல் ரீதியாக செயல்பட்டு வந்த இந்த கூட்டமைப்பு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தது. இதன் காரணமா கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்து அனந்தசங்கரி வெளியேறினார். 


6 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார் இரா. சம்பந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.