சங்கரய்யா உடல் நாளை அடக்கம்.. அரசு மரியாதைகளுடன் இறுதி நிகழ்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர், சுதந்திர போராட்ட தியாகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102.
வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 வது மாநிலச் செயலாளராக இருந்தவர். இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முக்கிய தலைவர் ஆவார். மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு போலீசாரின் தடியடிகளுக்கெல்லாம் ஆளானவர்.
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது முதல்முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1967ம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினராக ஒருமுறையும், மதுரை கிழக்குத் தொகுதியில் 2 முறையும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 முறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர். ஒழுக்கத்திற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எளிய வாழ்க்கை, பண்பான நடத்தை இன்றைக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர்.
அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 1942ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மாணவராக, கட்சித்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, விவசாய சங்க மாநில, அகில இந்தியத் தலைவராக பல சேவைகளையாற்றியவர். சுதந்திரப் போராட்ட வீரர்,உழைக்கும் மக்களின் தோழர் என மக்களால் அழைக்கப்பட்டவர்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் சங்கரய்யா. சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர் . முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சங்கரய்யாவின் உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும், தி.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.