அரசியல் பண்ணாதீங்க.. கை தூக்கி விடுங்க.. தர்மம் உங்களைக் காக்கும்.. எஸ்.வி.சேகர் உருக்கம்

Su.tha Arivalagan
Dec 20, 2023,02:48 PM IST

சென்னை: வெள்ள பாதிப்பிலும் கூட அரசியல் செய்யாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை தூக்கி விடுங்க. அந்த தர்மம் உங்களைக் காக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் உருக்கமாக கூறியுள்ளார்.


எல்லாவற்றிலும் அரசியலைக் கலக்கும் காலம் இது. வெள்ளத்திலும் கூட அரசியலை தூக்கலாகவே கலந்து பார்க்கிறார்கள் பலரும். இது காலம் காலமாக நடப்பதுதான். யார் ஆட்சியில் இருந்தாலும் சரி எதிர்த் தரப்பில் இருப்பவர்கள் எதிர்த்தே அரசியல் செய்வது காலம் காலமாக வழக்கமாக உள்ளது.


பலரும் கர்நாடக அரசியல்வாதிகளைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.. குறிப்பாக காவிரிப் பிரச்சினையின்போது அவர்கள் அத்தனை பேரும் ஓரணியில் நிற்பார்கள். ஒருவருக்கொருவர் அப்படி நெருக்கமாக அமர்ந்து பரபரப்பாக ஒரே குரலில் இயங்குவார்கள்.. ஒரே சக்தியாய் இணைந்து நிற்பார்கள்.. காரணம், இது நம்முடைய மக்களின் பிரச்சினை. இங்கு பிரிவினைக்கு  இடம் இல்லை. இணைந்து நிற்க வேண்டிய களம் இது என்பதை அவர்கள் உணர்ந்து அரசியல் செய்வார்கள்.




ஆனால் தமிழ்நாட்டில் அது இதுவரை நடந்ததே இல்லை.. கனவில் கூட நடந்ததில்லை. அப்படி நடக்குமா என்பது பலரின் கனவாகவே உள்ளது. இதுவரை அது சாத்தியமே ஆகவில்லை என்பதுதான் வருத்தம் கலந்த உண்மையாகும்.


இப்போதும் கூட வெள்ளப் பாதிப்பிலும் கூட  அரசியல்தான் நீக்கமற கலந்து ஓடிக் கொண்டுள்ளது. இதைத்தான் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் எஸ்.வி.சேகர். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள  முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம். இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள்  இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.


6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள். அந்த தர்மம் உங்களை காக்கும் என்று அவர் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.


சாதாரமாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போய் மக்களுக்கு உதவியதைக் கூட சிலர் சர்ச்சையாக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னையில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தனது வீட்டின் முன்பு தேங்கிக் கிடந்த சகதியையும் சேறையும் தானே தெருவில் இறங்கி அதை அகற்றினார் எஸ்.வி.சேகர். நாலு பேருக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதற்காக அந்த வீடியோவையும் அவர் போட்டிருந்தார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர் நன்றி கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பதில்தான் அக்கறை காட்டினாலே இடையில் புகும் அரசியலை ஓரம் கட்டி விட்டு எந்த பெரும் துயரிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.. இடையில் புகுந்து அரசியல் செய்ய முயற்சிப்போரும் கூட வெட்கித் தலைகுணிந்து விலகி விடுவார்கள்.