ஃபெஞ்சல் புயலால் வந்த பெரு மழையால்.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!
சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் நகர முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறின. இந்த மழை நீர் அனைத்து இடங்களிலும் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 51 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரையில் 50.3 செ.மீட்டர் மழையும், அரூரில் 33.1 செ.மீட்டர் மழையும், சேலம் ஏற்காடு பகுதியில் 23.9 செ.மீட்டர் மழையும், திருவண்ணாமலையில் 22.3 செ.மீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக சென்னை- திருச்சி ரயில் பாதை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் தேங்கி இருப்பதால், வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுவும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் போக்குவரத்தை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் தற்பொழுது மீட்பு மற்றும் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்