பவதாரணி மறைந்து ஒரு வருஷமாச்சே.. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கச்சி.. நெகிழ்ந்த வெங்கட் பிரபு

Manjula Devi
Feb 12, 2025,04:46 PM IST
சென்னை: ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி  கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி  காலமானார்.  கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

குயில் போன்ற குரலுக்கு சொந்தக்காரர். ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் மிகப் பெரிய ஹிட்டாகியது. பலரது இசையில் பின்னணி பாடியுள்ளார். 



தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பின்னணி பாடியுள்ளார்.  இளையராஜா இசையில் பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை ,விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில்  மெர்க்குரி பூவே, அஞ்சலி படத்தில் வரும்  மொட்ட மாடி மொட்ட மாடி, காதலுக்கு மரியாதை படத்தில் என்னைத் தாலாட்ட வருவாளா, ஓ பேபி பேபி, நேருக்கு நேர் படத்தில் துடிக்கிற காதல் உள்ளிட்ட பாடல்களை பாடி தனக்கென்று ரசிகர் மத்தியில் ஒரு இடத்தை பிடித்தவர்.

இந்நிலையில், இன்று பாடகி பவதாரணியின் பிறந்நாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி என்று பவதாரணியுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.