வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருவிழா: நாகை, கீழ்வேளூர் வட்டங்களுக்கு நாளை.. உள்ளூர் விடுமுறை!
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாளை ஆக., 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நகழ்வான தேர்பவனி செப். 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
விழாவிற்கு வருபவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2000த்திற்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. திருவிழாவை முன்னிட்டு 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 29ம் தேதி நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக., 29இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29 வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்