வேல் பூஜை கேள்விப்பட்டிருப்போம்.. அதை வீட்டிலேயே அருமையா பண்ணலாம்.. எப்படி தெரியுமா?
சென்னை: வேல் பூஜை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வீட்டிலேயே எப்படி வேல் பூஜை பண்றதுன்னு நம்மில் பல பேருக்கு தெரியாமல் இருக்கும்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.. குமரன் இருக்கும் இடமெல்லாம் வேல் இருக்கும்.. வேலவன், வேல்முருகன், வேலோன் என்று செந்தில் குமரனுக்கு வந்த அத்தனை பெயர்களிலும் வேல் இடம் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட முருகனை தமிழ்க் கடவுளாக தமிழ் மக்கள் உலகம் தோறும் கொண்டாடுகிறார்கள்.
முருகப்பெருமானின் வழிபாட்டில் முக்கியமான வழிபாடு இந்த வேல் பூஜை ஆகும். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேலுக்கு பூஜை பண்ணும் முறை நடைமுறையில் இருந்துள்ளது.
வேல் பூஜை அனைவரும் செய்யலாமா?
இந்த சந்தேகம் பலருக்கும் உண்டு. அதாவது, வேல் பூஜை அனைவரும் செய்யலாமான்னு ஒரு சந்தேகம் பல பேருக்கு இருக்கும். சந்தேகமே வேண்டாம். கண்டிப்பா அனைவரும் வீட்டிலேயே எளிமையான முறையில் வேல் பூஜை செய்யலாம். குறிப்பாக அலுவலகத்தில் மேல் அதிகாரிகளால் பிரச்சனை உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், காரிய தடைகள் உள்ளவர்கள் பிள்ளைகளின் படிப்பு,பொருளாதாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டுபவர்களுக்கு இந்த பூஜை சிறப்பான பலனை தரும்.
வீட்டிலேயே வேல் பூஜை செய்வது எப்படி?
நம் பூஜை அறையில் வேல் ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். அது வெள்ளியிலோ, மரத்திலோ அல்லது செம்பு போன்ற உலோகத்தில் செய்த வேலாக இருக்க வேண்டும். ஒரு தட்டிலோ அல்லது மண் கலசத்திலோ பச்சரிசியை நிரப்பி வேலை அதன் மேல் வைக்க வேண்டும். வேலின் மேற்புறம் நுனியில் எலுமிச்சையை குத்தி வைக்கவும். வேல் சிறியதாக இருந்தால் அதன் மீது நுனியில் சந்தனம் குங்குமம் இடவும். பின்னர் வேலிற்கு பூஜை செய்வதற்கு பால், சுத்தமான விபூதி, சந்தனம், மலர்கள் போன்றவற்றை தயாராக வைக்க வேண்டும்.
முதலில் வேலை நீரால் நன்கு சுத்தம் செய்த பின் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாதாரணை காட்டி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். வீட்டில் விளக்கேற்றி முருகப் பெருமானின் வேல்மாறல் அல்லது கந்தர் அலங்காரம் போன்ற பாடல்களை பாராயணம் செய்தால் வேல் பூஜை செய்த முழுமையான பலன் கிட்டும்.
எந்த நாளில் வேல் பூஜை பண்ணலாம்?
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் முருகனின் விசேஷ தினங்களான சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் போன்ற விரத நாட்களிலும் பூஜை செய்வது சிறப்பு. காலை அல்லது மாலையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த பூஜையை வீட்டிலேயே செய்யலாம்.