கோயம்பேடு மார்க்கெட்டுக்கு.. காய்கறி வரத்து குறைந்தது.. கிடுகிடுவென உயர்கிறது விலை..!

Meenakshi
May 13, 2024,05:46 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


சென்னை உள்ள முக்கிய மார்க்கெட்டாக கோயம்பேடு உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறி கொண்டு வரப்பட்டடு விற்பனை செய்யப்படுகிறது. 295 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சந்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தையாகும். இந்த சந்தை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை மொத்த சந்தையாகவும், அதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் இரவு வரை சில்லறை விற்பனையும் நடைபெறுகிறது. 


தினமும் இந்த சந்தைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நாள் ஒன்றிற்கு வந்து செல்கின்றனர்.நாள் ஒன்றுக்கு 500 முதல் 700க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மார்கெட்டில் காய்கறிகளின் விலை தினமும் வரத்திற்கு ஏற்றார் போல் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது பல இடங்களில் கோடை வெளியில் தாக்கம் அதிகமாக இருப்பதினால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 




தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பத்தால் பயிர் சேதம் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கேயம்பேடு வரும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.


ஒரு கிலோ பீன்ஸ் நேற்று ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.220 முதல் ரூ.240க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ. 50க்கு  விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 70க்கும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ. 80 மற்றும் ரூ.90க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ எலுமிச்சை ரூ.70க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.160க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ பூண்டு ரூ. 250க்கு விற்கப்பட்டது இன்று ரூ.280க்கும், ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.40க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ.28க்கும் விற்கப்படுகிறது.