நேத்து வந்த கூத்தாடி விஜய்.. வார்த்தையை விட்ட.. ஆளூர் ஷாநவாஸ்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா
சென்னை: கூத்தாடி.. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் எல்லா நடிகர், நடிகைகளும் சந்திக்கும் முதல் தாக்குதல் இதுதான். இந்த தாக்குதலை சந்திக்காத அரசியல் நடிகர் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு பொதுவான தாக்குதல் இது. ஆனால் இந்தக் காலத்திலும் கூட இது போன்ற பிற்போக்குத்தனமான தாக்குதல் தொடர்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
அன்று எம்ஜிஆரை கூத்தாடி என்று விமர்சித்தார்கள். சிவாஜி கணேசனும் கூட தப்பவில்லை. பின்னர் ஜெயலலிதாவுக்கும் நேர்ந்தது. அரசியலுக்கு வரும் ஆசையில் இருந்து வந்த ரஜினியையும் கூட அதே வார்த்தையால் விளாசினார்கள். கமல்ஹாசனும் இதே விமர்சனத்தை சந்தித்தார். இப்போது அந்த வார்த்தையை விஜய்யை நோக்கி வீச ஆரம்பித்துள்ளனர்.
ஒருவர், விமர்சிக்க முடியாத அளவுக்கு அவர் வீரியம் மிக்கவராக மாறும்போது அல்லது மாறும் சூழல் உருவாகும்போது அவர்களை தனிப்பட்ட முறையில், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் விமர்சிப்பது உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு உத்திதான்.
தமிழ்நாட்டில் அது மிக மிக சாதாரணமாக பயன்படுத்துவதை காலம் காலமாக பார்த்து வருகிறார்கள் மக்களும். எம்ஜிஆர் தனிக் கட்சி ஆரம்பித்தபோது அவரை கடுமையாக சாடிய அவரது எதிர்ப்பாளர்கள், உச்சகட்டமாக கூத்தாடி என்ற சொல்லைப் பிரயோகித்தனர். இன ரீதியான விமர்சனங்களும் கூட எம்ஜிஆருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. ஆனால் அது எதுவுமே எம்ஜிஆரின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. மாறாக திமுகவுக்கு மாற்று சக்தியாக உருவெடுத்தார் எம்ஜிஆர்.
அதே போன்ற விமர்சனம் பின்னர் ஜெயலலிதா அரசியலில் முக்கிய அவதாரம் எடுத்தபோதும் வந்தது. அவருக்கும் அந்த கூத்தாடி விமர்சனம் சரமாரியாக வந்து விழுந்தது. ஆனால் அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரது அரசியல் வளர்ச்சி அனைவருக்குமே தெரியும்.
ரஜினிகாந்த் அரசியல் அபிலாஷைகளுடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தபோது அவரும் இதே விமர்சனத்தை சந்தித்தார். ரஜினி ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவது என்ற முடிவை அறிவித்தபோது இன்னும் உக்கிரமானது. ஆனால் அவர் அரசியலுக்கே வரவில்லை ஜகா வாங்கி விட்டார். ஒரு வேளை வந்திருந்தால் இன்னும் மோசமான விமர்சனங்களைக் கூட அவர் சந்தித்திருக்கக் கூடும்.
இப்போது விஜய்யை நோக்கி இந்த வசனம் வந்து சேர்ந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் நேற்று நடந்த புதிய தலைமுறை டிவி விவாதத்தின்போது திடீரென கோபமாகி விட்டார். கடும் கோபத்துடன், யார் இந்த விஜய்.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எப்படி கொச்சைப்படுத்தலாம்.. கொச்சைப்படுத்த இவர் யார்.. திமுகவின் கட்டுப்பாட்டில் திருமாவளவன் இருப்பதாக அவர் எப்படி பேசலாம்.. திருமாவளவன் ஒரு அறிவார்ந்த தலைவர். 35 வருடமாக பிரஸ் பார்க்கிறாங்க.. ஒரு கூட்டத்திலாவது அவர் எழுதி வச்சு படிச்சார்னு யாராவது சொல்ல முடியுமா.. நேத்து வந்த கூத்தாடி இப்படிப் பேசலாமா.. இதை அனுமதிக்க முடியுமா. திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கார்னு எப்படி பேச முடியம். கூட்டணி அழுத்தத்தால இங்க வரலைன்னு எப்படி சொல்லலாம் என்று ஆவேசமாக பேசிக் கொண்டே போனார்.
மிகச் சிறந்த பேச்சாளர், வெறும் வாய் வார்த்தையுடன் நில்லாமல் உரிய தரவுகளோடு வாதிடக் கூடியவர். தனது கருத்துக்களை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக எடுத்து வைக்கக் கூடிய திறமையான ஒரு இளம் தலைவராக அறியப்படுபவர் ஆளுநர் ஷாநவாஸ். பலருக்கு ரோல் மாடலாகவும் இருப்பவர். அவரே இப்படி ஒரு பிற்போக்குத்தனமான வாதத்தை கையில் எடுத்தது பலருக்கும் ஆச்சரியம். நம்ம ஷாநவாஸா இப்படிப் பேசியது என்று பலரும் கேட்டுக் கொள்கிறார்கள். சமூக வலைதளத்திலும் கூட ஆளுர் ஷாநவாஸின் பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கூத்தாடி என்று பார்த்தால் அரசியலில் பலரும் நடிப்புத் துறையிலிருந்து வந்தவர்கள்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனே கூட அன்புத்தோழி என்ற படத்தில் நடித்துள்ளார். நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலினே கூட ஒரு தொலைக்காட்சித் தொடரில் அற்புதமாக நடித்து அந்தக் காலத்தில் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றவர்தான். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கூட அடிப்படையில் நடிப்புத் தொழிலில் இருந்தவர்தான். அவரது படங்கள் இன்று வரை பேசப்படுகின்றன. கடைசியாக அவர் நடித்த மாமன்னன் படம் கூட சமூக நீதி பற்றிப் பேசி பெரும் வரவேற்பைப் பெற்ற படம்தான். எனவே தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நடிப்புத் துறைக்கும், அரசியலுக்கும் இடையே பின்னிப் பிணைந்த பெரும் நெருக்கம் இருப்பதை யாரும் மறுக்கவும் முடியாது, அதை நிராகரிக்கவும் முடியாது.
ஆனால் தான் ஒரு கூத்தாடிதான் அதற்காகப் பெருமைப்படுகிறேன். எப்படியெல்லாமோ என்னை இகழ்ந்தார்கள், கேலி செய்தார்கள், உருவக் கேலிகளையெல்லாம் தாண்டி, என்னுடைய உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கிறேன் என்று விக்கிரவாண்டி மாநாட்டிலேயே விஜய் அழுத்தம் திருத்தமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியமாக தனி மனித தாக்குதல், யாரையும் இழிவுபடுத்துப் பேசுவதில்லை என்பதை கொள்கை முடிவாகவே அறிவித்து நாகரீகமான முறையில் செயல்பட்டு வருகிறார் விஜய். ஆனால் எதிர்த் தரப்பினர் அவரை கடுமையாக விமர்சிப்பதை, இழிவாகப் பேசுவதை தொடர்ந்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் விஜய்க்கான செல்வாக்கை அதிகரிக்கவே உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.
விவாதங்களில் கோபம், ஆதங்கம், ஆவேசம் எழுவது இயல்புதான்.. அப்போதும் கூட கட்டுப்பாடான முறையில் வாதிடுவதுதான் சிறந்த ஆளுமைகளுக்கு நல்ல அடையாளம். ஆளூர் ஷாநவாஸும் அப்படிப்பட்டவர்தான்.. ஆனால் அவரே ஒரு தொழிலை குறைத்து மதிப்பிட்டு இழிவிபடுத்தும் வகையில் நேற்றுப் பேசியது நம்ப முடியாத ஆச்சரியம்.. தனது தவறை , ஷாநவாஸ் சரி செய்து கொள்வார் என்று நம்பலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்