பெரியார் சிலையை அகற்றுவது இருக்கட்டும்.. வச்சது யார் தெரியுமா?.. வன்னியரசு அதிரடி

Su.tha Arivalagan
Nov 09, 2023,10:17 AM IST

சென்னை: ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலையை பாஜக ஆட்சி வந்தவுடன் அகற்றுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். முதலில் அந்த சிலையை வைத்தது யார் என்று அண்ணாமலைக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.


ஸ்ரீரங்கம் கோவில் முன்பு பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. பல காலமாகவே இந்த சிலை இருந்து வருகிறது. இந்த சிலைக்கு எதிராக பாஜகவினரும், இந்து முன்னணி போன்றோரும் அவ்வப்போது கருத்துக்கள் கூறுவது வழக்கம். அந்த அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சிலை அங்கிருந்து அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.


இதற்கு வன்னியரசு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பதில்:




பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையும் கடவுளை வணங்குபவன் முட்டாள் எனும் வாசகமும் அகற்றப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை  சபதம் செய்துள்ளார். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்.  


அண்ணாமலை பேசும் போது, ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் தந்தை பெரியார் வாசகம் அடங்கிய பலகை 1967 ல் வைக்கப்பட்டதாக கூறுகிறார். சிலை வைக்கப்பட்டதை தான் அப்படி சொல்லுகிறார். ஆனால், தந்தை பெரியார் சிலை 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகா வைக்கப்பட்டது?


முதலில், அது குறித்து பார்க்கலாம். 1969ம் ஆண்டு ஜூன்20 ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த தினவிழா கூட்டம் ஶ்ரீரங்கம் தெற்கு வாசல் கடை வீதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தான் பெரியாருக்கு சிலை வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நகர்மன்ற கவுன்சிலர் ராஜகோபால் அய்யங்கார் நகராட்சியில் முறைப்படி தீர்மானத்தை முன் மொழிகிறார்.


காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நகர்மன்றத் தலைவர் வெங்கடேஷ்வரா தீட்சிதர், தந்தை பெரியார் சிலை வைப்பதற்காக ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் 12 க்கு 12 எனும் அளவில் 144 சதுர அடி நிலம் ஒதுக்குகிறார்.

1973ல் அரசாணை போடப்பட்டு 1975 ஆம் ஆண்டு அந்த நிலத்தை நகராட்சி  திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கிறது. 


நிலம் ஒப்படைக்கப்பட்டாலும்  2006 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ல் தான் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படுகிறது. தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள் வெங்கடேஸ்வரா தீட்சிதரும் ராஜகோபால் அய்யங்காரும் தான். உண்மை இப்படி இருக்க  அண்ணாமலை அவர்களோ 1967 ல் அமைக்கப்பட்டதாக சொல்கிறார்.


எல்லாவற்றிலும்  அரை வேக்காடுத்தனமாக உளறுவதை முதலில்  கை விடுங்கள் அண்ணாமலை.  அப்புறம் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலைகளை அகற்றுவோம் என சொல்லுவது, ஆட்டுக்குட்டி முட்டை இட்டு

கோழிக்குஞ்சு வந்த கதை தான் என்று கூறியுள்ளார் வன்னியரசு.