நாடு முழுவதும் செல்லுங்கள்.. வலுவான கூட்டணியை அமையுங்கள்.. ஸ்டாலினுக்கு திருமா. அழைப்பு

Su.tha Arivalagan
Mar 02, 2023,09:58 AM IST
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சென்று மமதா பானர்ஜி, கேசிஆர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து  காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும்  என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பிரமாண்டப் பொதுக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.



இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்றைய கூட்டத்தில் பேசிய பேச்சை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார் திருமாவளவன். இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளில் ஆற்றிய  உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2024 லோக்சபா தேர்தலுக்கான பரப்புரையை தனது பிறந்த நாளிலிருந்தே அவர் தொடங்கி விட்டார்.


எங்க கிட்ட வாங்க.. "இ சிட்டிசன் ஆகுங்க".. நித்தியானந்தா பலே அழைப்பு!


3வது அணி அமைப்பதில் எந்தப் பொருளும் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்தை அவர் ஒலித்திருக்கிறார். அவரது கருத்து வலுப்பட வேண்டும். நடைமுறைக்கு வர வேண்டும். அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து மமதா பானர்ஜி,  கேசிஆர் போன்ற தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஓரணியில் திரட்டும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்க முக்கிய எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த முயிற்சியில் இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சில தலைவர்கள், குறிப்பாக மமதா பானர்ஜி, மாயாவதி, கேசிஆர் போன்றோர் காங்கிரஸ் தலைமையில் இணைய விரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று பேசிய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன் கார்கே, எங்களது தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. பிரதமர் வேட்பாளரையும் நாங்கள் முன்னிறுத்தவில்லை என்று கூறியுள்ளார். இது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் நேற்றைய பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, 3வது அணி அமைப்பதில் எந்தப் பயனும் இருக்காது என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். தற்போது அகில இந்தியத் தலைவர்களை ஸ்டாலின் சந்திக்க வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஸ்டாலின் விரைவில் தேசிய அளவிலான பயணத்தைத் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.