அந்தப் பக்கம் வாழை.. இந்தப் பக்கம் கொட்டுக்காளி.. மிரண்ட ரசிகர்கள்.. அசத்தல் ரிசல்ட்!

Manjula Devi
Aug 23, 2024,05:06 PM IST

சென்னை:   மிகுந்த எதிர்பார்ப்புடன் வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய இரு படங்களும் இன்று திரைக்கு வந்துள்ளன. இரு படங்களுக்கும் ரசிகர்களிடையே மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டையும் மக்கள் கொண்டாடி வருவது நல்ல படங்களின் ரசிர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இளம் வயதில் தான் பட்ட கஷ்டங்களையும்  சோகத்தையும் அதனால் அவர் சந்தித்த வலியையும்  காட்சிப்படுத்தியுள்ள ஒரு திரைப்படம். இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த இருபதாம் தேதி சென்னையில் பிரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா ரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




இப்படத்தைப் பார்த்து அனைவரும் கண்கலங்கி வாழை படம் நன்றாக இருப்பதாக மாரி செல்வராஜுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இயக்குநர் பாலா படத்தைப் பார்த்து விட்டு ஸ்தம்பித்துப் போய் அமர்ந்தது பலரையும் படம் குறித்து எதிர்பார்க்க வைத்து விட்டது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், போன்ற வெற்றி படங்களின் வரிசையில் வாழை திரைப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்   கொண்டாடி வருகின்றனர்.


வாழை படம் ரிலீஸ் குறித்து மாரி செல்வராஜ் கூறியதாவது, அனைவருக்கும் அன்பின் வணக்கம். இன்று என் நான்காவது திரைப்படமான வாலை வெளியாகிறது. வாழையில் என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும் கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முகத்திலும் அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


கொட்டுக்காளி:




மறுபக்கம் கொட்டுக்காளி வந்துள்ளது. இது சிவகார்த்திகேயின் தயாரிப்பில் சூரி நடித்துள்ள படம். சிவகார்த்திகேயன் தனது எஸ் கே ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வரிசையில் காமெடி நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு தற்போது ஹீரோவாக அவதார எடுத்திருக்கும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே நிறுவனம் தயாரித்துள்ளது. 


மலையாள மொழியில் கும்பலங்கி நைட்ஸ், ஹெலன், கப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அன்னா பென் கொட்டுக்காளி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே கூழாங்கல் திரைப்படத்தை இயக்கி சர்வதேச விருதுகளைப் பெற்ற பி.எஸ் வினோத் ராஜ், மனித உணர்வுகளின் பின்னணியில் இப்படத்தை இயக்கியுள்ளார்.


ஏற்கனவே சூரி நடிப்பில் வெளியான விடுதலை, கருடன் போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து வருகின்றனர். மேலும் கொட்டுக்காளி படத்தை முன்னதாகவே கமல்ஹாசன் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். கொட்டுக்காளி படத்திற்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் சூரியின் நடிப்பையும், இயக்குநர் வினோத் ராஜின் கதை கையாண்ட விதத்தையும் பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்