கோவை டூ பெங்களூரு.. 30ம் தேதி முதல் .. வந்தாச்சு வந்தே பாரத்.. வெற்றிகரமான சோதனை ஓட்டம்!
கோவை: கோவை-பெங்களூரு இடையே டிசம்பர் 30ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் இதைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. கோவை ரயில் நிலையத்தில் கற்பூரம் காட்டி பூஜை செய்த பின்னர் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேலும் ஒரு புதிய ரயிலை டிசம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்துகின்றனர். இது கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ளது. இதையும் சேர்த்தால் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள 4வது வந்தே பாரத் ரயிலாக இது அமையும்.
கோவை - பெங்களூரு இடையே நிறைய தொழில் வர்த்தகத் தொடர்புகள் இருப்பதால் போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இதனால் இந்த நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இதை ஏற்று தற்போது இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
டிக்கெட் விலை
கோவை - பெங்களூரு இடையிலான 380 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடையும். இதில் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் உடன் கூறிய ஏசி சேர் கார் பெட்டிகள் அடங்கியிருக்கும்.
சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1000மாவும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1850 ஆகவும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தொடங்கியது சோதனை ஓட்டம்
எட்டு பெட்டிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட சோதனை ஓட்ட ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணி அளவில் பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அதன் பின்னர் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சோதனை ஓட்ட ரயில் இரவு 8 மணி அளவில் கோவை திரும்புகிறது.
தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
வரும் 30ம் தேதி கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது. பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து இதை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான புக்கிங் இன்றிலிருந்து துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.