வந்தே பாரத் மீது மோதிய பசு.. காலைக்கடன் போய்க்கொண்டிருந்தவர் மீது விழுந்து.. அவர் பலி!
Apr 21, 2023,11:56 AM IST
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் ஒரு பசு மாடு மீது மோதியது. அந்த மாடு தூக்கி எறியப்பட்டு, தண்டவாளத்திற்கு ஓரமாய் உட்கார்ந்து காலைக்கடன் போய்க் கொண்டிருந்த நபர் மீது விழுந்ததில், அந்த நபர் அங்கேயே இறந்து போனார்.
இதுவரை வந்தேபாரத் மீது பல மாடுகள் மோதியுள்ளன. இதில் ரயிலின் முகப்புப் பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக வந்தேபாரத் மீது மோதிய மாடு விழுந்து ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.
ஆல்வார் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரவல்லி விகார் காவல் நிலையத்திற்குட்பட்ட இப்பகுதியில் சிவதயாள் சர்மா என்ற நபர் தண்டவாளத்திற்கு அருகே அமர்ந்து காலைக்கடனை செலுத்திக் கொண்டிருந்தனர். அவர் ஓய்வு பெற்ற ரயில்வே எலக்ட்ரீசியன் ஆவார். அப்போது காலை 8.30 மணி இருக்கும்.
அந்த சமயத்தில் வந்தே பாரத் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே தனது காலைக்கடனை செலுத்திக் கொண்டிருந்தார் சிவதயாள் சர்மா. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு பசு மாடு தண்டவாளத்தின் குறுக்கே போய் விட்டது. ரயில் வந்த வேகத்தில் மாடு அப்படியே தூக்கி வீசப்பட்டது. தூக்கி எறியப்பட்ட அந்த மாடு நேராக சிவதயாள் சர்மா மீது வந்து விழுந்தது.