சென்னை டூ நெல்லை வரை.. வந்தே பாரத் ரயில்.. எப்போது தொடங்கும்?
Sep 04, 2023,04:42 PM IST
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் அதி வேக ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் வர்ணிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் வேகமாகவும் பயணிகளை விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு 2019 ஜனவரி 27ஆம் தேதிதான் வந்தே பாரத் விரைவு ரயில் என பெயரிடப்பட்டது. முதல் சோதனை ஓட்டம் டெல்லி -வாரணாசி இடையே நடந்தது.
சென்னை ஐ.சி.எப்பில்தான் தற்போது வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 26 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை, சென்னை -மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் காசர்கோடு- திருவனந்தபுரம் இடையே தினமும் தலா ஒரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களின் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை -திருப்பதி மற்றும் எழும்பூர்- நெல்லை இடையே தினசரி வந்தே பாரத் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயில்களுக்கு கொள்கை ரீதியான ஒப்புதலை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
31-வது வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டமும் சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த ரயில் மங்களூர் -பாலக்காடு அல்லது சென்னை -மங்களூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.