கருப்பு சேலையில் வந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.. கேட்டதுமே வந்துச்சே.. அந்த சிரிப்பு!

Baluchamy
Mar 27, 2023,01:12 PM IST
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம.எல்.ஏக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் சட்டசபைக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருப்பு சேலையில் வந்தது கலகலக்க வைத்தது.

ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கியதால் பாஜகவை எதிர்த்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி 'மோடி' என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி என்பவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை தொடுத்தார்.



இந்நிலையில் அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தியை சூரத் நீதிமன்ற குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் எம்பி பதவியை இழந்தால் வயநாடு தொகுதி  காலியாகிவிட்டதாக  அறிவிக்கப்பட்டது. குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் ராகுல் காந்தியினால் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சினர் பாஜகவை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் இன்று முதல் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏக்கள் வந்தனர். 

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபைக்கு கருப்பு சேலையில் வந்திருந்தார். சட்டசபை வாசலில் செய்தியாளர் ஒருவர் வானதி சீனிவாசனிடம் மேடம் நீங்க போராட்டத்திற்கு வந்திருக்கீங்களா? என கேட்டார். அதற்கு வானதி என்? என்று கேட்க.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என பத்திரிகையாளர்கள் பதிலளிக்க.. அச்சச்சோ இது எனக்கு தெரியாதே? என வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

அப்போது அங்கிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்குறீங்களா என வானதியிடமே கேட்க அய்யோ ஆளை விடுங்க என்று சிரித்தபடி வெட்கத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார் வானதி.  வழி விடுங்கப்பா, வழி விடுங்கப்பா என்று கூறியபடி அவர் உள்ளே போனார்.