வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்.. ஹீரோயிசத்தை விட உசுரு முக்கியம்.. பொறுப்போடு நடந்துக்கங்க டிரைவர்களே!
- பொன் லட்சுமி
திருநெல்வேலி: அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது போக வேண்டாம் என்று எச்சரித்தும் காதில் வாங்காமல் பஸ்சை ஓட்டி சென்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நேற்று பெய்த மழையில் ரயில் பாலத்தின் அடியின் சுரங்க பாதையின் கீழ் நான்கு அடி அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இருசக்கர வாகனங்கள் பஸ் லாரி போன்றவை வேற்று பாதையில் மாற்றி பயணித்தன. இந்த நிலையில், அந்த வழியாக ஒரு அரசு பஸ் சென்றது. அதனைப் பார்த்த ஒரு இளைஞர் இந்த வழியாக போக வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.
அதற்கு அந்த பஸ் டிரைவர் இப்பொழுது தான் இந்த வழியாக லாரி சென்றது என்று கூறுகிறார்... லாரி சென்றாலும் பேருந்து போக முடியாது இடையில் நின்றுவிடும் என்று எச்சரித்தும் அதனை காதில் வாங்காமல் அந்த அரசு பஸ் டிரைவர் பஸ்ஸை ஓட்டிச் சென்றார். அந்த இளைஞர் சொன்னது போலவே பஸ் சுரங்கப் பாதையில் சென்ற அடுத்த விநாடியே வெள்ள நீரில் சிக்கி ஆப் ஆகி விட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அந்தப் பேருந்தில் உள்ள மக்களை மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அந்த பக்கம் போக வேண்டாம் என்று இவ்வளவு சொல்லியும் கேட்காமல் சென்று பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்த அந்த அரசு பஸ் டிரைவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார்கள்.
இப்பொழுது வரும் பஸ்களில் பி எஸ் 6 சென்சார் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் இன்ஜெக்ஷன் சிஸ்டம் உள்ளது. அதில் நீர் புகுந்தால் வாகனம் தானாகாவே ஆப் ஆகி விடும். வேகமாக போய் கடந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது... லாரி சென்றது என்பதற்காக அதன் பின்னாடியே பேருந்தை இயக்கியது தவறு. தன்னை நம்பி பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பும் உயிரும் மிக முக்கியம். எவ்வளவு சொல்லியும் கேளாமல் இப்படி சென்றது அந்த டிரைவரின்ா பொறுப்பின்மையை காட்டுகிறது. ஒரு பொறுப்புள்ள ஓட்டுநருக்கு தன்னுடன் பயணிக்கும் ஐம்பது அறுபது பயணிகளின் உயிரையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது, நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின்ஜெயந்தி, குளச்சல் பணிமனையை சேர்ந்த அந்த அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மழை வெள்ள காலத்தில் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதல்தான் முக்கியம். அவர்கள் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்டும். அதுதான் பாதுகாப்பானது.