இதழோடு இதழ் சேரும் நேரம்.. முத்த யுத்தம் புரிந்து மொத்தமாக அன்பை வெளிப்படுத்தும் நாள்.. இன்று!

Manjula Devi
Feb 13, 2024,10:14 AM IST

சென்னை: "இத்துனூண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா.. இல்ல இங்கிலீஷ் முத்தத்தில கஷ்டம் இருக்கா".. அழகான வரிகள் இல்லையா.. சின்ன முத்தமோ அல்லது பெரிய முத்தமோ உங்க துணைக்கு நாம் கொடுக்கும் அன்பு பரிமாற்றம் உள்ளம் வரை ஊடுறுவி.. உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து.. உறவை வலுப்படுத்தும்.


எனக்கு அவர் முத்தமே கொடுக்கிறதில்லை.. ஆடிக்கொருமுறைதான் என்று இந்தக் காலத்திலும் அலுத்துக் கொள்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அப்படிப்பட்டவரா நீங்க.. அப்படீன்னா அழகான இந்த முத்த தினத்தில்.. தினந்தோறும் தித்திப்பான முத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் பிளான் செய்யும் அருமையான தருணம் இன்று!




ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காதலர் தினத்தின் முதல் நாள் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி கிஸ் டே காதலர்களால் கொண்டாடப்படுகிறது.


முத்தம் என்பது காமத்தின் வெளிப்பாடு அல்ல. முத்தம் உணர்ச்சி மிகுந்த அன்பின் ஊடகம் ஆகும். தாத்தா பாட்டியின் அரவணைப்பு முத்தம், தாயின் அன்பு முத்தம், தந்தையின் பாச முத்தம், கணவனின் ஆசை முத்தம், காதலனின் காதல் முத்தம் என்று அன்பின் வெளிப்பாடுகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். நாளை காதலர் தினம் என்பதால், ஒரு காதலன் காதலிக்கோ, காதலி காதலனுக்கோ முத்தம் கொடுத்து எல்லையற்ற காதலை வெளிப்படுத்துவதற்கான அழகான தருணம் இன்று!


ஒரு காதலன் காதலிக்கு முதன் முதலாக தரும் பரிசு எவ்வளவு ஸ்பெஷல் ஆனதோ அதுபோல காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் கொடுக்கும் முதல் முத்தமும் ஸ்பெஷல் தான். அது எப்போதும் மறக்காது.. அந்த தித்திப்பை வர்ணிக்க இதுவரை வார்த்தைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. காதலர்கள் வெளிப்படுத்தும் அன்பு முத்தத்திற்கு ஈடு இணை என்பதே இல்லை.. அது ஒரு அழகான யுத்தமும்!


காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் கண், மூக்கு, நெற்றி, உதடு, கை என பல இடங்களில் கொடுக்கப்படுகிறது. அதிலும் காதலன் காதலிக்கு கண்களை‌ மூடிக்கொண்டு முத்தம் கொடுக்கும் போது உள்ளார்ந்த உணர்வுகளை ரசிக்கிறார்கள் என்று அர்த்தமாம். கண்களை திறந்து கொண்டு முத்தம் கொடுத்தால் காதலியின் அழகை ரசிப்பார்கள் என்று அர்த்தமாம்.




முத்தம் எந்த இடத்தில் கொடுத்தால்.. என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா.. வாங்க சொல்றேன்.. கன்னத்தில் முத்தமிட்டால், மேற்கிந்திய கலாச்சாரப்படி ஹலோ என்று கைகள் குலுக்குவதற்கு சமமாம். நெற்றியில் முத்தமிட்டால் உனக்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதைக் குறிக்குமாம். கைகளில் முத்தமிட்டால் காதலன் மதிப்பிற்குரியவராக செயல்பட்டு காதலுக்கும் மதிப்புக் கொடுப்பார் என்பது அர்த்தமாம். உதட்டில் முத்தமிட்டால் ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு காதல் செய்தால்,ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அன்பு செய்கிறார்கள் என்பதை குறிக்குமாம். காதலில் ஆழ்ந்த ஈர்ப்பு கொண்டவர்கள் உதட்டில் முத்தமிடுகிறார்களாம்.


முத்தமிடுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்க. அதனால் ஏற்படும் உடல் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா. வாங்க பார்போம்.


நீங்கள் உங்கள் துணைக்கு முத்தம் கொடுக்கும் போது, இருவரின் உணர்ச்சிகள் மற்றும் பாலுணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்ச்சிகள் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைக்குமாம். இதனால் இதய துடிப்புகள் அதிகரித்து, ரத்த நாளங்கள் விரிவடையுமாம். காதலன் காதலிக்கு முத்தமிடும் போது மூளையில் உள்ள ஆக்ஸிடோஸின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்பட்டு, மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்குமாம். அதனால் அந்த தருணத்தில் காதலர்களை மகிழ்ச்சியாக உணர வைக்குமாம். இது ஒரு நிமிடத்திற்கு  26 கலோரிகளை கரைக்க உதவுகிறது. 




முத்தமிடும்போது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் மாற்றங்கள் நிகழ்கிறது. முத்தமிடும் போது  காதலர்கள் மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது. இது மனரீதியாக மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மனதில் எழும்  குழப்பங்களால் டென்ஷனை குறைக்கிறது.


நீங்கள் உங்கள் துணைக்கு முத்தமிடும்போது ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பட்டு, அதனால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிஞ்சுகிட்டீங்க. அப்புறம் என்ன நாளைக்கு லவ்வர்ஸ் டே. அதுக்கு முன்னாடி உங்க துணைக்கு முத்தம் கொடுத்து இன்றைய பொழுதை இனிமையாக்குங்க.. லவ்வர்ஸ் மட்டும் இல்லைங்க.. உங்க பிள்ளைக்குக் கொடுக்கலாம்.. அம்மாவுக்குக் கொடுக்கலாம்.. அப்பாவுக்கும் தரலாம்.. பிரியமான அனைவருக்கும் இன்று அன்பும் பாசமும் கலந்து முத்தத்தைப் பரிசாக அளியுங்கள்.


இதழ்கள் ரெண்டும் பேசிக்கொள்ளும் மௌன மொழி தின வாழ்த்துக்கள் காதலர்ஸ்!