valentine's day: காதல் என்றால் என்ன?.. உன்னைக் கண்ட பின் தெரிந்தேன்.. தெளிந்தேன்!
Feb 14, 2023,12:55 PM IST
உலகெங்கும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மட்டுமல்லாமல் அன்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய தினம் இது என்றும் சொல்லலாம்.
தாயை நேசிக்கும் பிள்ளைகள்.. பிள்ளைகளை நேசிக்கும் அம்மா அப்பா, அண்ணை நேசிக்கும் தங்கை, அக்காவை நேசிக்கும் தம்பி.. பாட்டியை நேசிக்கும் பேரன்.. இப்படி அன்புக்கு பஞ்சம் இல்லா உலகு இது.. காதலிக்கும், நேசிக்கும், அன்பு செலுத்தும் ஒவ்வொருக்குமான நாள் இது.
உலகெங்கும் காதலர்கள் பெரும்பான்மையாக கொண்டாடப்படுவதால் இந்த காதலர் தினத்தன்று கொஞ்சம் .. கொஞ்சும் காதல் மொழிகள்.. உங்களுக்காக!
காதல் என்றால் என்ன.. உன்னைக் கண்ட பின்புதான் தெரிந்து கொண்டேன்.. தெளிந்து நின்றேன்.. முகிழ்த்த காதலில் முளைத்த அன்பு.. வேரூன்றி வளரட்டும்.. உயிரின் இறுதி வரை உறைந்து கிடக்கட்டும்!
காதலில் வீழ்ந்த பின் தூக்கம் வருவதில்லை.. தூக்கத்தில் வரும் கனவை விட.. நம் காதல் அழகானது.. அருமையானது.. அதை ரசிக்க தூக்கத்தை தியாகம் செய்வதில் தவறில்லையே!
நீ யார்.. எப்படிப்பட்டவள்.. எங்கிருந்து வந்தாய்.. எப்படி வந்தாய்.. எதுவும் எனக்குத் தேவையில்லை.. உன்னைக் காதலிக்கிறேன்.. அப்படியே.. அடியோடு.. இப்படியே.. இறுதி வரை.. இடைவெளியின்றி!
காதல் காற்று போல.. சில நேரம் தென்றலாய்.. பல நேரம் புயலாய்.. எப்படி இருப்பினும் என்னை வந்து தழுவிச் செல்ல மறக்காது.. உன்னைப் போலவே!
உண்மையான காதல் எது தெரியுமா.. அது ஆத்மாவைத் தட்டி எழுப்ப வேண்டும்.. உணர்வுகளை உயிர்ப்போடு பிடித்து வைத்திருக்க வேண்டும்.. வீழும் எண்ணத்தை அடியோடு புரட்டிப் போட்டு.. வாழும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.. இதயங்களை மட்டுமல்லாமல், சிந்தனைகளையும் சேர்த்துப் பிணைத்திருக்க வேண்டும்.. நம்பிக்கை தர வேண்டும்.. நாலு செய்ய வேண்டிய இடத்தில் நாற்பதை செய்து முடிக்கும் தெம்பு தர வேண்டும்.. சாதாரண வாழ்க்கையை சாதனை அத்தியாயமாக மாற்றிக் காட்டிட வேண்டும்.
காதலைக் கொண்டாடுங்கள்.. காதலோடு வாழுங்கள்!