Valentine's day: காதலில் உயிர்த்து இருப்பவன் நான்.. நிறைந்து நிற்பவள் நீ.. இணைந்து நிற்பது நாம்!
- தேவி
மௌன இதழ் விரித்து
மனதைக் கலைத்து
கொஞ்சம் பூ மொட்டுக்கள்
அவளுடைய இதழில்.....
ஆர்ப்பரிக்கும் அலை ஓசையும்
அமைதி கொள்ளும்
அவளது ஓரப்பார்வையால்....
தூரப்பார்வையும்
கிட்டப் பார்வையாகும்
அவள்
ஈரப்பார்வை பட்டால்!
மனதின் காதலை
மவுனமாக சொல்லும்
மயில் தோகை ஆக சினுங்கும்
அவனது பார்வை.....
சிணுங்கும் நிமிடங்களில்
சிலிர்க்க வைக்கும்
அவள் இதழோர
கடைச்சிரிப்பு
தென்றலின் இசையில்
நனைந்து கொண்டு
குயிலின் ஓசையில் சிலிர்த்துக்கொண்டு
பூ இதழின் உணர்வைப் புரிந்து கொண்டு
புத்துயிர் பெற்று
புது உலகம் படைத்து
நகர்ந்து நகர் வலம் போவோம்
என்னுடன் வா.....
இதயம் அணைத்து
இரு கை பிணைந்து
உள்ளங்கள்
உரச உரச
இரு உயிர்கள்
ஒன்று கலந்து
ஒன்றாய் மாறி
நகர் மட்டும்ல்ல..
உலா வருவோம்
உலகெங்கும்!
பார்வையில் மின்னும் ஓசை
தேடலில் கிடைக்கும் மௌனம்
நிஜத்தை மறைக்கும் கனவு
உயிரையும் உருக்கும் தேடல்
மனதை மயக்கும் விரல் நுனி
மௌனத்தை கலைக்கும் இடைவெளி
பார்வையின் தேடலை
இசைக்கும் மனதில்
லயிக்கும் மனது
இரு மனங்களும்
ஒரு மனமாகி
இணைந்து
அழகாய்
ரம்யமாய்
அற்புதமாய்
உறவை சொல்லும் இதழ் நுனி
இசையை விரும்பும் இதயத் துடிப்பு
கனவை விரும்பும் கண்கள்
காதலை உணர்ந்த நொடியில்
காவியம் பாடும் எனது நெஞ்சம்
மலரின் மௌனத்தைப் போன்ற கண்களாய்
குயிலின் இன்னிசை போன்ற தேன் இதழ்களாய்
வானவில்லின் வண்ணம் போன்ற பாவனைகளால்
இறகின் மென்மை போன்ற இதயமாய்
மரத்தின் பசுமை போன்ற சுவாசமாய்
மனதில் வருடும் தென்றலாய்
வாசம் வீசும் வண்ணமாய்
என் மூச்சு உள்ளவரை...
உனக்காக என்னுயிர்
மேகங்களின் இடையில்
சுற்றுத்திரியும் காற்றினைப் போல
உன் இமைகளின் இடையில்
சிக்கிக் கொண்டு தவிக்கின்றேன்
இமைகளில்
சிக்கிய
உன்னை
இதயத்துக்குள் ஏற்றி
இறுக்கி
பிடித்து இருக்கிறேன்
இரு மூச்சும்
ஒரு மூச்சாய்
நீண்டு தொடரும்
வீரியமாய்
பூத்துக் குலுங்கி
சிரித்து கசங்கி விழும் பூவினை போல
அனுதினமும் உன் அருகில்
புத்துயிர்பெற்று சிலிர்த்து
கலைந்து தொலைந்து போகின்றேன்
மௌனங்களை மட்டுமே
வார்த்தையாகக் கொண்டிருக்கும்
உன் அருகில் ஜாடைகளும் மண்டியிடும்
ஒரு நிமிடப் பார்வைக்காக
ஓராயிரம் முறை
பிழைத்து வருகின்றேன்
மண்டியிட்டு
உன் மௌனத்தை
மெல்ல
அறிந்து
குளிர்ந்து
உறைகிறேன்
உன் அருகில்
என்னை தொலைத்து
உன்னை தேடும் பொழுதில்
மீட்டெடுத்தேன்
உன் பார்வையைப் பருகி பருகி
பூத்து நிற்கிறேன்
பூரித்து நிற்கிறேன்
பனியினில் வாடும் செடியினை போல
உன்னருகில் உறைந்து நிற்கின்றேன்...
என்னருகில்
உறைந்து நிற்கும் உன்னை
என் இரு கைகளில்
இணைத்து எடுக்கிறேன்
மனதின் காதலை
மணியோசையாக புரிந்து கொண்டால்
உன் இதழ் ஓரம்
தேனாக தித்திப்பேன்
அந்த தித்திப்பை
தெள்ளமுதென
கொண்டு நானும் வலுப்பெறுவேன்
உன் காதலில்
உயிர்த்து இருப்பவன் நான்
நிறைந்து நிற்பவள் நீ
இணைந்து நிற்பது நாம்
இலையின் அசைவுகளை
காற்று சொல்லும்
காதலின் எல்லையை
கனவு சொல்லும்
மனதின் மயக்கத்தை
கண்கள் சொல்லும்
என் காதலின் ஆழத்தை
காலம் சொல்லும்..,.
இலையின் அடியில் இருக்கும் தண்டு போல
பூவுக்குள் இருக்கும் வண்டு போல
மேகத்துக்குள் இருக்கும் நிலவு போல
காற்றுக்குள் இருக்கும் வேகம் போல
உனக்குள் என்னை ஊற்றி
மறைத்து வைத்திருக்கின்றேன்
தண்டின் மீதமர்ந்து
தெம்பாக பூ பிடித்து
பூவின் மதுரம் அருந்தும்
வண்டாக நான்
காற்றை விட வேகமாய்
உனக்குள் இறங்கி
உன்னுள் மறைந்து
உன்னாய் மாறி நிற்கும்
என் இதயம்
உன் இதயத்தை
இறுக்கிப் பிடித்தபடி
ஒரே உதயம் கண்டபடி
உன்னருகே தன் நிலை மறந்து
பார்வையின் தீண்டலை
முத்துக்குள் இருக்கும்
சிப்பி போல ரசிக்கின்றேன்...
சிப்பியில்
நிறைந்து
இருக்கும்
என் உற்சாகம்
உன்னை
பரவசப்படுதியபடி
உன்னை
மட்டுமல்ல
உன் உயிரையும்
உணர்வுகளையும்
எப்போதும் தீண்டிய படி
பூரித்திருக்கும்
என் இதயம்