Valentine's day 2025: காதலே காதலே..இதயங்களை நேசிப்போம்.. அன்பை சுவாசிப்போம்!
சென்னை: காதலர் தின கொண்டாட்டத்தில் காதலர்கள் மதிப்புமிக்க காதலை உருவாக்குவோம் என்ற சபதத்தோடு உண்மையாகவும் உறுதியாகவும் இதயபூர்வமான அன்பை வெளிப்படுத்தி கொண்டாடும் அழகான தருணம் இன்று .
ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். அதற்கு முன்னோட்டமாக காதலர் தின ஒரு வார கொண்டாட்டத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டேவில் தொடங்கி தொடங்கி அடுத்த நாள் ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, நேற்று கிஸ் டே என சொல்லக்கூடிய முத்த தினம் வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கை கூடிய காதலை களிப்புடன் கொண்டாடும் தினம். காதலர் தினத்தைக் கொண்டாட காத்திருக்கும் அன்பானவர்களுக்கான காதலர் தினம் இன்று..!
காதல் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது, இயங்காது. அதற்கு ரூபங்கள் பல உண்டு. ஆனால் ஆன்மா ஒன்றுதான். பூக்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள், என அனைத்திலும் காதல் உண்டு. காதல் இல்லாத மனிதர்களே கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதர்களும்
காதல், அன்பு,நேசம், பாசம், விட்டுக் கொடுத்தல், ஆறுதல், அரவணைப்பு என எதாவது ஒரு உணர்வுகள் மூலமாக தனது அன்பை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். அன்பின் அடையாளமே காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உணர்வுபூர்வமாக நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை கொடுத்து எனக்கு நீ உனக்கு நான் என்பதை மனதார ஏற்றுக்கொண்டு காதலை வெளிப்படுத்தும் அழகான நாள் இன்று. இந்த நாளில் காதலன் காதலியிடம் அன்பின் மூலம் நம்பிக்கை ஊட்ட, அன்பே உன்னை நான் உண்மையாகவும் ஆழமாகவும் நேசிக்கிறேன். நமது காதலில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதற்கு உறுதியாகவும் பக்க பலமாகவும் இருந்து உன் வாழ்வோடு நான் பயணிப்பேன். நமது இதயங்கள் இரண்டும் ஒன்றிணைந்து அடியெடுத்து வைக்கும் இந்த காதலர் தினத்தில் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நாம் இருவரும் இணைந்து வாழ்வோம் என்று அன்பானவர்களிடம் உங்களின் காதல்களை வெளிப்படுத்துங்கள்.
இந்த காதலர் தினத்தை காதலர்களுக்கான நாளாக மட்டும் பார்க்காமல் அன்பின் வெளிப்பாடாக அனைவரும் கொண்டாட கூடிய சிறந்த நாளாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு அம்மா குழந்தைகள் மீது காட்டும் அரவணைப்பு, ஒரு கணவன் மனைவியின் மீது காட்டும் அக்கறை, ஒரு மகள் தனது தாய் தந்தையரின் மீது காட்டும் மரியாதை, நண்பர்கள் சக நண்பர்களிடம் காட்டும் செயல்பாடுகள் என இவை அனைத்துமே அன்பின் வெளிப்பாடுகளாக தான் இருக்கின்றன.
எல்லோருடைய வாழ்க்கையும் அன்பை மையமாக கொண்டே இயக்கப்படுகின்றன. அதனால் காதலர் தினத்தை காதலர்களுக்கான நாளாக மட்டும் பார்க்காமல் எல்லாரும் வழக்கமாக கொண்டாடுகின்ற அன்பின் நாளாக எண்ணி குடும்பத்தோடு கொண்டாடலாம். ஒரு அன்பாளர்களின் தினமாக கொண்டாடலாம்.
சரி காதலர் தினத்தை நாம் எப்படி வித்தியாசமாக கொண்டாடலாம் என்று பார்ப்போமா..
காதலர்கள் தவிர்த்து மற்றவர்களும் கொண்டாட கூடிய தினமாக இதை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு அனைவரும் ஒற்றுமையாக ஒன்று கூடி இன்று ஒரு நாள் லஞ்ச்சோ அல்லது ஒரு டின்னரோ போய் சாப்பிட்டுக்கொண்டே ஆக்கபூர்வமான அன்பை பரிமாறி கொண்டாடலாம். குடும்பத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து மனதார உட்கார்ந்து பேசினாலே அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாகிவிடும். இதனால் குடும்ப உறவுகள் வலுவடைந்து வாழ்க்கை பிரகாசிக்கும்.
அதே மாதிரி பெற்றோர்கள் பிஸியா இருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில் இன்று ஒரு நாள் குழந்தைகளோடு சந்தோஷமாக நேரத்தை ஒதுக்கி கொண்டாடலாம். குழந்தைகள் தனக்காக தனது பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான அரவணைப்பை உணர்வார்கள்.
கணவன் மனைவி உணர்வுபூர்வமான அன்பை பரிமாறிக் கொள்ள இன்று ஒரு நாள் ஒதுக்கி ஒரு அழகான கேண்டில் லைட் டின்னர் மாதிரி ஏற்பாடு செய்து கொண்டாடலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்யோன்யம் அதிகரித்து மகிழ்ச்சியான உணர்வுகள் வெளிப்படும்.
அதேபோல் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவரிடம் உள்ள நன்மை எது தீமை எது என்று பிரித்துக் கொண்டு நல்லதையே எடுத்துக் கொள்வோம் என்ற மகிழ்ச்சியான உரையாடல் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் நல்வழிப்படுத்தும் நண்பர்களின் உறவுகளும் வலுப்படும்.
அதேபோல் காதலர்களும் பெற்றோர்கள் மதிக்கும்படியான உண்மையான உணர்வுகளில் நீடித்துக் கொண்டு, அவர்களுக்கு நற்பேரை வாங்கிக் கொடுத்து மரியாதையும் மதிப்புமிக்க காதலர் தினத்தை கொண்டாடுங்கள் காதலர்களே.. காதலர் தின வாழ்த்துக்கள்!