Chocolate day 2025.. காதல் தித்திக்க இதைக் கொடுங்கள்.. சாக்லேட் தினம் வந்தது இப்படித்தான்!
சென்னை: அன்புக்குரியவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு பிணப்பை ஏற்படுத்த சாக்லேட்டுகளை பரிமாறிக் கொண்டு, அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சிகளை அனுபவிக்க சாக்லேட் தினம் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைகிறது. இன்றைய நாள் காதலர்களின் இனிமையான நாளாகவும் மாறுகிறது.
காதலர்கள் காதலர் தினத்தை ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடி வருகின்றனர். காதலர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே துணை இருப்பவர்களும் கூட தற்போதுள்ள காலகட்டத்தில் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலர் தினத்திற்கு முன்னதாக ஒரு வாரம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வரிசையில், 9ஆம் தேதியான இன்று சாக்லேட் தினம் ஆகும்.
காதலர் தின கொண்டாட்ட வாரத்தில் மூன்றாம் நாளான இன்று பிப்ரவரி ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. சாக்லேட் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா..?
ஸ்வீட் எடு கொண்டாடு என நம் முன்னோர்கள் எந்த ஒரு நற்செயலை செய்தாலும் ஸ்வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தான் கூறிவந்துள்ளனர். அதைத்தான் வழக்கமாகவும் கடைப்பிடித்து வருகின்றனர். அதனால்தான் எந்த ஒரு நல்ல செயலாக இருந்தாலும் இனிப்புடன் ஆரம்பிப்பது தமிழர்களின் மரபாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் திறமைகளை தட்டிக் கொடுக்க சாக்லேட் கொடுத்தால் போதும் அவர்களின் முகம் முழுவதும் அவ்வளவு பூரிப்பு தான்.
அதே போல் காதலில் விழுந்த காதலியும் குழந்தைகளுக்கு இணையானவர்கள் போன்று தான் நடந்து கொள்வார்கள். ஏனெனில் காதல் வந்துவிட்டால் காதலியின் கால்கள் தரையில் படாமல் ஒரு குழந்தை போல் மென்மையான உணர்வுகளுடன் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற எண்ணம் தோன்றுமாம். இதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமன் மற்றும் காபின் ஆகிய வேதி பொருட்கள் நம் மூளையில் உள்ள என்டோர்பின்களை தூண்டி நமது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அதாவது சாக்லேட் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்தும். இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
இதனால்தான் காதலன் காதலியிடம் காதலை வெளிப்படுத்தும் போது காதலிக்கு சாக்லேட் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியில் மெய் மறந்து விடுவார்கள். அந்த சமயத்தில் அன்பானவர்கள் இருவரும் காதலை பரிமாறிக் கொள்ளும் முதல் தருணத்தில் சாக்லேட் பரிமாறி கொண்டால், ரத்த அழுத்தம் குறைந்து இதயம் சீராக துடிக்க செய்து அதன் மூலம் ஏற்படும் உணர்வுகள் மற்றும் புத்துணர்ச்சி காதலை அடுத்த நிலையை அடைய செய்கிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லேட் தனி இடம் பெற்றுள்ளது.
இப்போது புரிந்ததா.. அதனால் தான் சந்தைகளில் கிடைக்கும் சாக்லேட்டுகள் எல்லாம் இதய வடிவத்தில் பெண்களைக் கவரும் வண்ணத்தில் கிடைக்கின்றன. எனவே உங்கள் காதலிக்கு பிடித்த இதய வடிவ சாக்லேட்டுகளை நீங்களும் வழங்கி அவர்களை சந்தோஷத்தில் திளைக்கச் செய்யுங்கள். என்ன.. சரியா!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்