நா.த.க. தலைவர் சீமானிடம் ஒன்றே கால் மணி நேரமாக நடந்த போலீஸ் விசாரணை முடிவடைந்தது

Su.tha Arivalagan
Feb 28, 2025,10:09 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடந்து வந்த விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன், சீமானிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுள்ளார். கோயம்பேடு இணை ஆணையர் அதி வீரபாண்டியன் முன்னிலையில் விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட ஒன்றே கால் மணி நேரமாக விசாரணை நடைபெற்றது.


10 மணிக்கு சீமானிடம் விசாரணை தொடங்கியது. இரவு 11.15 மணியளவில் விசாரணை முடிவுக்கு வந்தது.  முன்னதாக மாலை 6 மணிக்கே ஆஜராக சீமான் திட்டமிட்டிருந்த நிலையில் இரவு 8 மணியளவில் வருமாறு காவல்துறை கேட்டுக் கொண்டதால் சீமான் வருகை தாமதமானது. 8 மணியளவில் ஆஜராக அவர் கிளம்பிய நிலையில் மேலும் தாமதமாக வருமாறு காவல்துறை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் வட பழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகே சாலையோரமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். 


முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டம் முடிவடையும் வரை போலீஸ் தரப்பு காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முதல்வர் கூட்டம் முடிவடைந்த நிலையில் சீமான், காவல் நிலையம் நோக்கி மீண்டும் புறப்பட்டார். காவல் நிலையத்தை அடைந்த நிலையில் அவரிடம் விசாரணை  தொடங்கியது. முன்னதாக காவல் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கில் கூடியிரு்நத நாதக தொண்டர்கள், சீமானுடன் வருவதற்கு முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



60க்கும் மேற்பட்ட கேள்விகள்


காவல் நிலையத்திற்குள் சீமான் தனது வழக்கறிஞர்களுடன் சென்றார். அதன் பிறகு சீமான் மட்டும் விசாரண அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் விசாரணையைத் தொடங்கினார். சமீபத்தில் பாதிக்கப்பட்ட நடிகையிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை காவல்துறை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், சீமானிடம் கேட்க வேண்டிய விளக்கத்தை கேள்விகளாக தயாரித்து வைத்து விசாரணை நடந்தது.


முன்னதாக சேலத்திலிருந்து  விமானம் மூலம் சென்னை வந்த சீமான் நேராக வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார். அங்கு தனது வக்கீல்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏழே முக்கால் மணியளவில் அவர் வளசரவாக்கத்திற்குப் புறப்பட்டார். அவருடன் சாட்டை துரைமுருகன், பிற நிர்வாகிகள், வக்கீல்களும் உடன் சென்றனர். தொண்டர்களும் சீமானைப் பின் தொடர்ந்து சென்றனர்.





சீமானிடம் கடந்த ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கட்டுப்படுத்த கடுமையாக போராட வேண்டியதாக இருந்தது. ஆனால் இன்று அப்படி நேராத வகையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  காவல் நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொண்டர்கள் நடமாட்டம் முழுமையாக கண்காணிக்கப்பட்டது.


காவல் நிலையத்தையும் காவல் நிலைய சுற்றுப் பகுதிகளையும் கண்காணிக்க டிரோன் கேமராக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு மொபைல் கேமரா கட்டுப்பாட்டு யூனிட்டையும் தயார் நிலையில் வைத்திருந்தது.  ஸ்ரீதேவி குப்பம் சாலையில் பேரிகார்ட் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புக்காக 300க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தேவைப்பட்டால் தடியடி நடத்தவும் தயார் நிலையில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஏராளமான பெண் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


ஆயிரக்கணக்கில் நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியில் குவிந்திருந்ததால் அப்பகுதி முழுவதுமே  தொடர்ந்து பரபரப்பாக காணப்பட்டது.