என் கானம் இன்று அரங்கேறும்.. லண்டனை மயக்கிய இசைஞானியின் சிம்பொனி.. சிலிர்த்த ரசிகர்கள்

Su.tha Arivalagan
Mar 09, 2025,10:05 PM IST

லண்டன்: இசைஞானி  இளையராஜாவின் முதலாவது சிம்பொனி இசை வடிவம் இன்று லண்டனில் உள்ள எவன்டிம் அப்போலோ  அரங்கில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.


மேற்கத்திய சிம்பொனி இசை வடிவத்தில் மிகவும் பிரபலமானவர்கள் மறைந்த இசை மேதைகள் பீத்தோவன் உள்ளிட்ட வெகு சிலரே. இந்த வரிசையில் நம்முடைய இளையராஜாவும் இடம்பெற்று இருப்பது ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. சிம்பொனி இசை வடிவத்தை முதல் முறையாக ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக அரங்கேற்றம் செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.


மேற்கத்திய இசை வடிவங்களில் ஒன்றான சிம்பொனி இசையை வடிவமைத்த ஆசிய இசையமைப்பாளர்களில் முதலாவது நபராக இசையமைப்பாளர் இளையராஜா விளங்குகிறார். அவரது முதலாவது சிம்பொனி நேரலை நிகழ்ச்சியானது இன்று லண்டனில் உள்ள எவன்ட்டிம் அப்பல்லோ அரங்கில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேறியது.




இளையராஜாவின் சிம்பொனியை நேரில் காண திரண்டிருந்த ரசிகர்கள் மிகவும் நெ கிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து அவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தனர். ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இளையராஜா தனது இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இந்திய நேரப்படி 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.


வேலியன்ட் என்ற பெயரில் இந்த சிம்பொனியை இளையராஜா உருவாக்கியிருந்தார். இளையராஜாவின் இந்த சிம்பொனி அரங்கேற்றத்தை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர்கள் கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் சென்னையில் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர்.


நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை மூலம் இளையராஜாவை வாழ்த்தி இருந்தார். சாமி உங்களால் இந்த நாட்டுக்கே பெருமை என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.


இந்த நிலையில் இளையராஜாவின் சிம்பொனி இசை உலகை தழுவியுள்ளது . ஈர விழிக் காவியங்கள் என்ற படத்தில் என் கானம் இன்று அரங்கேறும் என்ற பாடலை இளையராஜா பாடியிருப்பார். அது இப்போது மீண்டும் நடந்துள்ளது. எத்தனையோ விதமான இசையைக் கொடுத்துள்ள ராஜாவிடமிருந்து இன்று வெளியாகியுள்ள சிம்பொனி இசை ரசிகர்களிடையே புதிய பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.