வைகுண்ட ஏகாதசி 2023.. மகிமை தரும் ஏகாதசி விரதம்.. நலங்கள் தரும் புண்ணிய திருநாள்!

Aadmika
Dec 23, 2023,09:30 AM IST

சென்னை : பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை யாராலும் சொல்லி விட முடியாது என புராணங்கள் சொல்கின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் வருவதுண்டு. இந்த ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு விதமான பலன்களும் உண்டு. ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகி விடும், பாவங்கள் தீரும், வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.


வருடத்தில் வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒரே ஒரு ஏகாதசியிலாவது கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என ஏற்படுத்தப்பட்டதே வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். இந்த ஏகாதசி அன்று உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதத்தை ஏகாதசி திதியில் துவங்கி, துவாதசியில் பாரணை செய்து நிறைவு செய்ய வேண்டும் என்பது நியதி.


வைகுண்ட ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்றும் பெயர். இது பாவங்களை போக்கி, புண்ணிய பலன்களை தரக்கூடிய அற்புதமான விரத நாளாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். பாவங்கள் தீரும். என்ன வேண்டிக் கொண்டாலும் அதை பெருமாள் நிறைவேற்றி வைப்பார். 




2023 ம் ஆண்டின் துவக்கத்தில் ஏற்கனவே ஒரு வைகுண்ட ஏகாதசி வந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதத்திலும் இரண்டாவது முறையாக வைகுண்ட ஏகாதசி வருகிறது. டிசம்பர் மாதம் 23 ம் தேதியான இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 22 ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி, டிசம்பர் 23ம் தேதி காலை 06.27 வரை ஏகாதசி திதி உள்ளது. இதனால் டிசம்பர் 22 ம் தேதி பகல் பொழுதிற்கு மேல் வைகுண்ட ஏகாதசி விரதத்தை துவங்க வேண்டும். டிசம்பர் 22 ம் தேதி இரவு தூங்கலாம். டிசம்பர் 23 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும். இதை கணக்கில் கொண்டு மற்ற வைணவ திருத்தலங்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும்.


சொர்க்கவாசலை தரிசித்த பிறகு டிசம்பர் 23 ம் தேதி நாள் முழுவதும் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து, டிசம்பர் 23 ம் தேதி இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் பெருமாளின் திருநாமங்களை கூறியபடி இருக்க வேண்டும். டிசம்பர் 24 ம் தேதி காலை 07.27 வரை துவாதசி திதி உள்ளது. அதற்குள் பாரனை எனப்படும் பல வகையான உணவு சமைத்து பெருமாளுக்கு படைத்து, நாமும் சாப்பிட வேண்டும். இருந்தாலும் உடனடியாக தூங்க சென்று விடக் கூடாது. டிசம்பர் 24 ம் தேதி மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகே தூங்க வேண்டும்.


இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்குரிய சனிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பாகும். அது மட்டுமல்ல இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை தவற விட்டால், அடுத்து வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்க 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். 2024 ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி கிடையாது. அடுத்த வைகுண்ட ஏகாதசி 2025ம் தேதி ஜனவரி மாதத்தில் தான் வர உள்ளது என்பதால் இந்த ஆண்டு வருவது மிக முக்கியமான வைகுண்ட ஏகாதசியாக கருதப்படுகிறது.