Vaikunta Ekadasi 2025.. "கோவிந்தா...கோவிந்தா" கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

vanitha
Jan 10, 2025,05:30 PM IST

ஸ்ரீரங்கம் : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆயிரக் கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று(ஜனவரி 10) அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.


பெருமாளின் 108 திவ்யதேசங்களில் முதன்மை திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என ஆழ்வார்களாலும், பக்தர்களாலும் கொண்டாடப்படும் கோவிலாக இருப்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். வைகுண்ட ஏகாதசி விழா இக்கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தில் மொத்தம் 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இரா பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெற காரணமாக இருந்த தலமும், இந்த நாட்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படுவதற்கு காரணமாக இருந்த தலமும் ஸ்ரீரங்கம் தான்.




ஒரு முறை கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க வந்த திருமங்கை ஆழ்வார், ரங்கநாதரை மனமுருக பல பாடல்கள் பாடினார். இதைக் கேட்டு மகிழ்ந்த ரங்கநாதர், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என கேட்டார். அதற்கு திருமங்கை ஆழ்வார், "பெரியாழ்வார் தங்களை போற்றி 1000 பாடல்கள் பாடி உள்ளார். அதனை நீங்கள் கேட்டு மகிழ வேண்டும்" என்றார். அதற்கு ஒப்புக் கொண்ட பெருமாள், "அதை எப்போது துவங்குவது என்பதையும் நீயே சொல்லி விடு" என்றார். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் 10 நாட்களும் தினமும் 100 பாடல்கள் என்ற வீதத்தில் 1000 பாடல்களை நீங்கள் கேட்ட வேண்டும்" என்றார். இதை பெருமாளும் ஏற்றுக் கொள்ள, அதற்கு இரா பத்து என பெயரிட்டு பெரியாழ்வார் பாடிய பாடல்கள் பாடப்படும் வழக்கம் ஏற்பட்டது.


அதே போல் மற்றொரு சமயம் ரங்கநாரை காண வந்த நாதமுனி, "பெருமாளே, ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடல்களில் 1000 பாடல்களை மட்டும் தான் கேட்டு மகிழ்வாயா? இன்னும் 3000 பாடல்கள் உள்ளதே அதையும் கேட்டு மகிழக் கூடாதா?" என்று விண்ணப்பம் வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றார் பெருமாள். பகல் பத்து என பெயரிடப்பட்டு, மீதமுள்ள 3000 பாடல்களையும் பாடும் வழக்கம் ஏற்பட்டது. இராப்பத்து-பகல் பத்து நடக்கும் காலங்களில் அரையர் சேவை குழுவினர் இயல், இசை, நாடகம் என்ற மூன்று முறைகளிலும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடுவார்கள். அந்த சமயத்தில் முத்துக் கொண்டை அணிந்து, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.




வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களும், பிந்தைய பத்து நாட்களும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படும். இந்த நாட்களில் தினமும் முத்து அங்கி சேவை அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிப்பார். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான ஜனவரி 09ம் தேதி உற்சவ மூர்த்தியான நம்பெருமாள், மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.


தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியான இன்று (ஜனவரி 10) காலை 4 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாக விரஜா நதியில் நீராடிய பிறகு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக பாண்டியன் கொண்டை, முத்து ரத்தின அங்கி அணிந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது பெருமாளுடன் சேர்ந்து பரமபத வாசலை கடந்து சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்