திறக்கப்பட்டது வைகை அணை.. ஆத்துக்குள்ள யாரும் இறங்காதீங்க.. வெள்ள அபாய எச்சரிக்கை!

Meenakshi
Nov 10, 2023,11:23 AM IST

தேனி: வைகை அணை நிரம்பி வரும் நிலையில், பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. இதனால்,  தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 5 மாவட்ட விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது. இதன் கொள்ளளவு 71 அடியாகும். வட கிழக்கு மழை அதிகரித்து வருதால் அணையின் நீர் மட்டம் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 70.05 அடியைத் தொட்டது. 


இதையடுத்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மூர்த்தி, ஐப. பெரியசாமி, தேனி ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அங்குள்ள மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு, தற்பொழுது வெளியேற்றப்பட்டு வருகிறது.


வைகையாற்றின் கரையின் ஒரமாக இருக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10ம்  தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.