உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு.. "திக்.. திக்".. கடைசி 5 மீட்டரை.. கடந்தாலே போதும்!
- மஞ்சுளா தேவி
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இன்று மீட்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாசி பகுதியில் சார்தாம் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வேலை செய்த 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளை தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் என பல்வேறு தரப்பும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நிபுணர் குழுவும் இதில் இடம் பெற்றுள்ளது.
சுரங்கப்பாதையின் பக்கவாட்டிலும் மேல்பகுதியிலும் துளையிட்டு பைப் மூலாக, உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு ஆக்சிஜனும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவே தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு மீட்பு பணியில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீட்பு பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தற்போது தொழிலாளர்களை மீட்க இறுதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதி பணியின்போது,
தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கு பிரம்மாண்ட குழாய் பதிக்கப்பட்டது . தற்போது கடைசி குழாய் பதிப்பதற்கான வெல்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது . இன்று இந்த பணிகள் முடிந்தவுடன் எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். இன்னும் ஐந்து மீட்டர் அளவிலான பணியே பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெரிய குழாயின் வழியே தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவர்களை இந்த குழாய் வழியே மெதுவாக குனிந்து வர வைத்து வெளியே அழைத்து வரப்படுவார்கள். தொழிலாளர்கள் கடந்த 12 நாட்களாக உள்ளே சிக்கி இருப்பதால், அவர்கள் வெளியே கொண்டு வந்த உடன் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனையும், 41 படுக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.