வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை.. உத்தரகாண்ட் சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்களும் மீட்பு

Su.tha Arivalagan
Nov 28, 2023,09:41 PM IST

- மஞ்சுளா தேவி


உத்தரகாசி:  உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டு விட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மீட்புப் பணியாக இது பார்க்கப்படுகிறது.


தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையின் இறுதி கட்டப் பணியாக தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான கடைசி குழாயும் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு விட்ட நிலையில், தொழிலாளர்களை மீட்டு வருவதற்காக சுரங்கப்பாதைக்குள் அமைக்கப்பட்ட குழாய் வழியாக மீட்பு குழுவினர்  உள்ளே சென்றனர். இருப்பினும் திட்டமிட்டபடி அவர்களை அழைத்து வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.


எல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில் தொழிலாளர்கள் படிப்படியாக வெளியே அழைத்து வரப்பட்டனர். முதலில் 5 பேர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து மற்றவர்களும் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அத்தனை தொழிலாளர்களும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.




தொழிலாளர்கள் 41 பேரும் உற்சாகமாக காணப்பட்டனர். யாரும் உற்சாகக் குறைவின்றி காணப்படவில்லை. 17 நாட்களாக சிக்கியிருந்த போதும் கூட அத்தனை பேரும் நல்ல மன தைரியத்துடன் இருந்துள்ளனர். வெளியே வந்த அவர்களை உத்தரகாண்ட் முதல்வர் தமி உள்ளிட்டோர் கை தட்டியும், கை குலுக்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.


தொழிலாளர்களை படுக்க வைத்து பெல்ட் வைத்து பாதுகாப்பாக கட்டிய பிறகு அவர்களை வெளியில் இருந்து கயிறு கட்டி மெல்ல வெளியே இழுத்து மீட்கப்பட்டனர்.  17 நாட்களுக்குப் பின்பு தொழிலாளர்களை சந்தித்ததில் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆனந்தமாக வரவேற்று மகிழ்ந்தனர்.


என்ன நடந்தது?




உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 12ம் தேதி சர்தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக சில்கயாரா - பார்கோடா இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை  அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளிகள் அந்தப் பக்கமாக சிக்கிக் கொண்டனர். 


இவர்களை மீட்பதற்காக ஆகர் இயந்திரம் மூலம் துளையிட்டு தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கு பிரம்மாண்ட குழாய் பதிக்கப்பட்டது .அதன் வழியாக ஆக்சிஜன் மற்றும் உணவு வழங்கப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் மீட்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த சுரங்க பாதைக்குள் சிக்கியுள்ள கான்கிரீட் கம்பிகள் மற்றும் பிளேடுகளை அகற்ற தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  


சுரங்கத்தில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்காக கடந்த 17 நாட்களாக மீட்பு குழுவினர் போராடி வந்த நிலையில் தற்போது இந்தப் போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. இந்த மீட்புப் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருமிதத்தைக் கொடுத்துள்ளது.