Uttarakhand Rescue: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி.. தலைவர்கள் பாராட்டு
டெல்லி: உத்தரகாண்ட் சுரங்கப் பாதையிலிருந்து 41 தொழிலாளர்களும் 17 நாள் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த 17 நாட்களாக இந்த சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மிகவும் போராடி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்று இரவு தேசிய பேரிடர் மீட்புப் படை வெற்றிகரமாக மீட்டது. 41 தொழிலாளர்களும் நல்ல உடல் நிலையுடன் இருந்தனர் என்பது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகிழ்ச்சி:
குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள டிவீட்டில், உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்து நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தேன். கடந்த 17 நாட்களாக அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு முட்டுக்கட்டைகளை சந்தித்தன. ஆனால் கடைசியில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவர்கள் அனைவரும் மன தைரியத்துடன் இருந்ததற்காவும், நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்காக அவர்கள் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியதற்காகவும் நாடே அவர்களுக்கு சல்யூட் அடித்து வணங்குகிறது.
தங்களது வீடுகளை விட்டு மிகவும் ரிஸ்க் எடுத்து இந்தப் பணியில் அவர்கள் இங்கு பணியில் ஈடுபட்டது மெய் சிலிர்க்க வைக்கிறது. இவர்களை மீட்க நடவடிக்க எடுத்த அனைத்துக் குழுக்களுக்கும், நிபுணர்களுக்கும், தொடர்ந்து பாடுபட்ட அனைவருக்கும் மிகவும் உறுதியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த சம்பவம்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவீட்டில், உத்தரகாசியில் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட நமது சகோதரர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டது என்னை நெகிழ வைக்கிறது. சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட எனது சகோதரர்களின் மன உறுதியையும், பொறுமையையும் நான் பாராட்டுகிறேன். இவர்கள் நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறியுள்ளனர். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நீண்ட காத்திருப்பு இப்போது முடிந்துள்ளது. இப்போது சுரங்கப் பாதையிலிருந்து மீண்டுள்ள நமது நண்பர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இணையலாம். அவர்களது குடும்பத்தினர் காத்து வந்த பொறுமையும், அமைதியும் பாராட்டுக்குரியது, தீரமானது. சவாலான சூழ்நிலையில் பொறுமை காத்தால் நம்மால் அதிலிருந்து மீள முடியும் என்பதையே இது காட்டுகிறது.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களது தீரமான செயலும், நடவடிக்கையும் 41 தொழிலாளர்களுக்கும் புது வாழ்க்கை கொடுத்துள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருமே மனித குலத்துக்கும், டீம் ஒர்க்குக்கும் மிகச் சிறந்த அற்புதமான உதாரணங்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
இதேபோல பல்வேறு தலைவர்களும் மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.