பல பெண்கள் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள் - ஹைகோர்ட்
Jul 23, 2023,03:15 PM IST
நைனிடால் : பலாத்கார தடுப்பு சட்டங்களை பல பெண்கள் தங்களுக்கான ஆயுதமாக தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆண்கள் தங்கள் பேச்சிற்கு கட்டுப்படவில்லை என்றால் இந்த சட்டசத்தை பெண்கள் ஆயுதமாக எடுக்கிறார்கள் என உத்திரகாண்ட் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நீதிபதி ஷரத் குமார் சர்மா முன் விசாரணைக்கு வந்தது.
விசாரித்ததில் 2005 ம் ஆண்டு முதல் இருவரும் நெருங்கி பழகி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி தெரிவித்த நீதிபதி, முதிர் பருவத்தில் சேர்ந்த இருவரும் விருப்பப்பட்டு உடல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் திருமணத்திற்கு மறுத்தாலும் அதை பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது. இப்போதெல்லாம் பெண்கள் பலர் சட்டப்பிரிவு 376 ஐ தங்களின் ஆண் துணைக்கு எதிராக பல்வேறு காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்ட அந்த நபர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருந்த போதிலும் தன்னையும் ஏமாற்றி தன்னுடன் தற்போது வரை உறவை தொடர்ந்து வருவதாக 2020 ம் ஆண்டு ஜூன் மாதம் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஷயம் தெரிந்தும் அவருடன் உறவை தொடரும் போது, பாலியல் பலாத்கார புகார் எப்படி கொடுக்க முடியும் என வழக்கை விசாரித்த நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். ஆரம்ப கட்டத்தில் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அதற்கு பிறகு இருவரும் விருப்பப்பட்டு தான் உறவு வைத்துக் கொண்டு அதை தற்போது வரை தொடர்ந்து வருகிறீர்கள். அதனால் ஆரம்ப கட்டத்தில் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதை தற்போதுள்ள நிலையில் ஏற்றுக் கொள்ள முடியாது என உத்தரகண்ட் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.