தக்காளியை சாப்பிடாதீங்க..விலை குறைஞ்சுரும்..  உ.பி பெண் அமைச்சர் பலே ஐடியா!

Su.tha Arivalagan
Jul 24, 2023,10:37 AM IST

ஹர்டோய், உத்தரப் பிரதேசம்: தக்காளியை கொஞ்ச நாளைக்கு சாப்பிடாம இருந்தா தானாக தக்காளி விலை குறையும் என்று சமீபத்தில் தமிழ்நாடு மூத்த பாஜக தலைவர் எச். ராஜா கூறியிருந்தார் இல்லையா.. தற்போது  அதேபோல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.


தற்போது நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்தபடியே உள்ளது. இதனால் மக்கள் தக்காளி  இல்லாமல் சமைக்கவும் முடியாது, தக்காளி வாங்காமல் இருக்கவும் முடியாது என்பதால் திரிசங்கு நிலையில் தத்தளித்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வு குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளியை சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறையும் என்று கூறியிருந்தார். தற்போது அதே போல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் பிரதீபா சுக்லா என்பவரும் கூறியுள்ளார்.




இவர் பெண்கள் வளர்ச்சி மற்றும் சிறார் ஊட்டச்சத்துத்துறை அமைச்சர் ஆவார். இவர் தக்காளி விலை உயர்வை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நூதனமான ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தக்காளி விலை ஜாஸ்தியாக இருந்தால் அதை வீட்டிலேயே மக்கள் வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் தக்காளியை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது.


தக்காளியை சாப்பிடுவதை நிறுத்துங்கள். விலை தானாக குறையப் போகுது. அதுக்குப் பதில் எலுமிச்சம் பழம் சாப்பிடுங்க.  யாருமே தக்காளியை சாப்பிடாவிட்டால் விலை குறையப் போகிறது என்று கேஷுவலாக கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தின் அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் தாங்களே அனைத்தையும் விளைவித்துக் கொள்கிறார்கள். இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் செய்ய வேண்டும். எப்பவுமே தக்காளி விலை அதிகம்தான். நாமே விளைவித்தால் இதை சமாளிக்கலாம். விலை உயரும்போது சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தலாம். மாற்று யோசனைகளைக் கடைப்பிடிக்கலாம் என்றார் அவர்.


என்ன மக்களே உங்களோட கருத்து என்ன?