இளம் வயதிலேயே விதவை.. விடாமல் சாதித்த பிரியங்கா.. உ.பியில் ஒரு பலே பெண்!
Dec 31, 2022,09:04 PM IST
லக்னோ: குடிகார கணவரை கட்டிய சில காலத்திலேயே இழந்து குழந்தைகளுடன் பரிதவித்து வந்த போதிலும், விடாமல் போராடி வாழ்க்கையில் ஒரு முக்கிய வெற்றியைப் பெற்று அத்தனைப் பெண்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக மாறியுள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரியங்கா சர்மா. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை சுகமாக இருப்பதில்லை. கல்லும் முள்ளும் இல்லாத வாழ்க்கைப் பாதை யாருக்கும் அமைவதில்லை. அதில்தான் நடந்தாக வேண்டும்.. அத்தனை தடைகளையம் கடந்தாக வேண்டும். நடக்க அஞ்சினால், கடக்கப் பயந்தால் வாழ்க்கை நரகமாகி விடும். எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதைத் தாண்டி வரும் மனோ தைரியமும், வைராக்கியமும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது. அதை தொடர்ந்து பெண்கள் ஒவ்வொரு துறையிலும் நிரூபித்தபடியே உள்ளனர். அப்படிப்பட்ட பெண்களின் வரிசையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரியங்கா சர்மாவும் இணைந்துள்ளார்.உ.பியைச் சேர்ந்த பிரியங்கா சர்மாவின் கணவர் ஒரு மொடாக்குடியர். எப்போதும் குடித்துக் கொண்டேதான் இருப்பாராம். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடுமையான குடிப் பழக்கத்தால் பிரியங்காவின் கணவர் சீக்கிரமே இறந்து போய் விட்டார். இதனால் 2 குழந்தைகளுடன் தனது வாழ்க்கையையும் பார்த்துக் கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு பிரியங்கா தலையில் விழுந்தது. சுமையைக் கண்டு மிரளாமல் இக்கட்டான சூழ்நிலையைக் கண்டு குழம்பாமல், தெளிவான முறையில் நடை போட ஆரம்பித்தார் பிரியங்கா. குழந்தைகளுடன் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு 2016ம் ஆண்டு சஞ்சய் காந்தி போக்குவரத்து நிறுவனத்தில் ஹெல்ப்பராக பணியில் சேர்ந்தார். அங்கேயே டிரைவிங்கும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். விரைவிலேயே டிரைவிங்கில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் 2020ம் ஆண்டு உத்தரப் பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பெண் டிரைவர்களையும் பணியில் சேர்க்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதையடுத்து அந்தப் பணிக்கு விண்ணப்பித்தார் பிரியங்கா சர்மா. அதில் வெற்றி பெற்று முறையான பயிற்சிக்குப் பின்னர் இந்த ஆண்டு அவருக்கு பணி நியமன உத்தரவு கொடுக்கப்பட்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக தனது பணியைத் தொடங்கியுள்ளார் பிரியங்கா. இவர்தான் உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே முதல் அரசு பெண் பஸ் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உத்தரப் பிரதேச வரலாற்றில் தனது பக்கத்தையும் இணைத்துக் கொண்டுள்ளார் பிரியங்கா சர்மா. பிரியங்காவுடன் மேலும் 25 பெண்களும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியில் இணைந்துள்ளனர். தனது சாதனை குறித்து பிரியங்கா கூறுகையில், எனது கணவர் குடிகாரர். சீக்கிரத்திலேயே இறந்து விட்டார். எந்த ஆதரவும் இன்றி நட்டாற்றில் விடப்பட்டேன். 2 குழந்தைகள் வேறு. வேறு வழியில்லாமல் என்னை திடப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்ய ஆரம்பித்தேன். டெல்லியில் ஒரு வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயே டிரைவிங் கற்றுக் கொண்டேன். அதில் தேர்ச்சி பெற்றதும் மும்பைக்கு இடம் பெயர்ந்தேன். பிறகு மேற்கு வங்காளம், அஸ்ஸ��ம் என பல மாநிலங்களுக்கும் வேலைநிமித்தம் இடம் பெயர்ந்தேன். 2020ம் ஆண்டுதான் உ.பி. அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்தேன். அதில் தேர்வு பெற்று பயிற்சியில் சேர்ந்தேன். தற்போது டிரைவராகியுள்ளேன். எங்களுக்கு சம்பளம் குறைவுதான். ஆனால் அரசின் ஆதரவு சிறப்பாக உள்ளது. பெண்களால் எந்த சிரமத்தையும், சூழலையும் சமாளிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம். என்னைப் போன்ற சூழலுக்குத் தள்ளப்படும் பெண்கள் அதைக் கண்டு பயப்படாமல், தைரியத்துடன் போராட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறுகிறார் பிரியங்கா சர்மா.