வலுக்கிறது சனாதன பிரச்சனை: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

Meenakshi
Sep 06, 2023,09:07 PM IST
லக்னோ: சனாதன பிரச்சனை தொடர்பாக உத்திர பிரதேச மாநிலத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. அவருக்கு எதிராக பாஜக, இந்துத்வா அமைப்புகள் அணி திரண்டுள்ளன. அதேசமயம், உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய அளவில் பெரும் ஆதரவும் குவிந்து வருகிறது.

மதச்சார்பற்ற  அமைப்புகள், கட்சிகள் உள்ளிட்டவை உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால் உதயநிதி ஸ்டாலின் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளார். 



இந்த நிலையில் அவரது தலைக்கு ரூ. 10 கோடி விலை வைத்து உ.பியைச் சேர்ந்த ஒரு சாமியார் மிரட்டல் விடுத்திருந்தார். தனது தலைக்கு சாமியார் விலை வைத்துப் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தாத்தா பாணியில் நையாண்டியாக பதிலடி கொடுத்திருந்தார். 

இந்த பின்னணியில், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோட் தலைமை நீதிபதிக்கு 262 பிலபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டடது. அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் தனது நிலையிலிருந்து சற்றும் மாறாமல் உள்ளார். 

இதற்கிடையே, கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங் கார்கே, சனாதன தர்மம் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  மேலும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ராம்புரில் உள்ள காவல் நிலையத்தில் ஹர்ஷ் குப்தா மறஅறும் ராம்சிங் லோதி ஆகிய வழக்கறிஞர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் ராம்பூர் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 

இரு தலைவர்கள் மீதும் 295 ஏ (வேண்டும் என்ற மத உணர்வுகளைப் புண்படுத்துவது), 153 ஏ (இரு வேறு மதக் குழுக்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.