காதலி அப்பாவோட செல்லைத் திருடி முதல்வருக்கு மிரட்டல் விடுத்த "மாப்பிள்ளை"!

Su.tha Arivalagan
Apr 26, 2023,12:38 PM IST
கான்பூர்: தனது காதலுக்கு காதலியோட அப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அவரை போலீஸில் மாட்டி விட இளைஞர் ஒருவர் செய்த செயல் உத்தரப் பிரதேசத்தை அதிர வைத்து விட்டது.

அப்படி என்ன நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் போலீஸாரின் அவசர போன் எண் 112க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்யப் போவதாக  மிரட்டி விட்டு போனை கட் செய்தார். முதல்வருக்கே மிரட்டலா என்று அதிர்ச்சி அடைந்த போலீஸார் விசாரணையில் குதித்தனர்.



விசாரணையில் ஒரு ஆட்டோ டிரைவர் சிக்கினார். அவரது செல்போனிலிருந்துதான் மிரட்டல் அழைப்பு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரோ, தனது செல்போன் தொலைந்து 10 நாட்களாகி விட்டதாக கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த போலீஸார் அந்த சிம் கார்டு தற்போது எங்கிருக்கிறது என்பதை சிக்னல் மூலம் கண்டறிய முற்பட்டனர். அப்போது அந்த சிம் கார்டை ஒருவர் பயன்பாட்டில் வைத்திருப்பது தெரிய வந்தது.

அந்த சிக்னலை வைத்து அந்த நபரை மடக்கினர். அவரது பெயர் அமீன். வயது 19. அமீனிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அதாவது அமீன், அந்த ஆட்டோ டிரைவரின் மகளை காலதித்து வருகிறார். இந்தக் காதலை ஆட்டோ டிரைவர் ஏற்கவில்லை. எதிர்த்து வந்தார்.

தனது காதலுக்கு காதலியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்தார் அமீன். அவரை இக்கட்டில் மாட்டி விட தீர்மானித்த அமீன், காதலியின் தந்தையின் செல்போனைத் திருடினார். பின்னர் சிம்கார்டைப் பயன்படுத்தி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.  அமீனின்  செயல்பாடுகள் குறித்து அவரது நண்பர்களும், அக்கம்பக்கத்தினரும் சாட்சியம் அளிக்கவே தற்போது அமீனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.