உள்ளே புகுந்த எருமைக் கூட்டம்.. தடம் புரண்டது ஊட்டி மலை ரயில்.. பீதியில் உறைந்த சுற்றுலா பயணிகள்!

Manjula Devi
Feb 26, 2024,03:16 PM IST

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அடையாளமான ஊட்டி, மலை ரயிலின் மீது எருமைகள் மோதியதால் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் ஏதுமின்றி மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் பயணம் செய்து  இயற்கையின் அழகை  ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள்  தினமும் ஆர்வமாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிகமாக ஊட்டியை நோக்கி அதிக அளவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். 




ஊட்டி மலை ரயிலில் பயணித்து தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர் சுற்றுலா பயணிகள். இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரயில் சென்று கொண்டு இருந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட  சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது குன்னூர் ரயில் நிலையத்தை தாண்டி பெர்ன்ஹில் பகுதி அருகே, ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தண்டவாளத்தின் எதிரே நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது. இதில் ஒரு எருமை மாடு உயிரிழந்தது. மற்றொரு எருமை  படுகாயம் அடைந்தது.


தண்டவாளத்தில் எருமை மாடு நிற்பதை கவனித்த ரயிலின் ஓட்டுனர் உடனடியாக பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 200க்கும் மேற்பட்டோர் பயணித்த மலை ரயிலில் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.  பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர்.  ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளை மீட்டு பத்திரமாக பஸ் மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.