ஹாய்.. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களா நீங்க.. அப்போது இதையும் கொஞ்சம் படிச்சு வைங்க!

Manjula Devi
Mar 01, 2024,07:29 PM IST

சென்னை: பெற்றோர்களே.. மாணவர்களே.. உங்கள் குழந்தைகள் யாராவது பொது தேர்வு எழுதுகிறார்களா.. அல்லது உங்கள் உறவினர்கள் வீட்டில் யாராவது பொதுத்தேர்வு எழுதுகிறார்களா.. அவர்களுக்கு இந்த டிப்ஸை கூறுங்கள். அதற்காக மறக்காமல் இதைப் படிங்க.. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


அன்பு மாணவ/ மாணவிகளே இன்று முதல் இன்னும் சில நாட்கள் உங்களின் எதிர்காலத்தின் கனவுகளை நிர்ணயிக்கும் தருணம்.. முக்கியமான நாட்கள்.. ஏனென்றால்  எதிர்கால கனவுகளை சுமந்து கொண்டு நிற்கும் மாணவ மாணவிகள் இன்று  முதல் பொதுத் தேர்வை எழுத ஆரம்பித்துள்ளனர். இன்று பிளஸ்டூ தேர்வு தொடங்கியுள்ளது. அடுத்து பிளஸ் ஒன், பத்தாவது வகுப்பு தேர்வுகளும் தொடங்கவுள்ளன.


தேர்வுகளை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே நம் கனவுக்குள் காலடி எடுத்து வைக்க முடியும். அப்படிப்பட்ட முக்கியமா நாட்களில் நுழையும் உங்களுக்கு சில டிப்ஸ்.. (வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த டிப்ஸ்களுடன், நம்முடையதையும் இணைத்துக் கொடுத்துள்ளோம்.. படிங்க)


பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளின் கவனத்திற்கு..




இன்று முதல் தேர்வுகள் முடியும் வரை குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் கடுஞ்சொற்களைக் கொண்டு திட்டி அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்.


இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உங்கள் குழந்தைகள் முந்தைய தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தால் அதனை சொல்லி குழந்தைகளை குறை கூறாமல் இன்று எழுதும் தேர்வுக்காக அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.


உங்கள் குழந்தைகளுக்காக டிவி சீரியல்கள், மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். கண்டிப்பாக டிவி கேபிள்களை துண்டித்து விடுங்கள். அவங்களுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க.. முக்கியமாக அவர்கள் படிப்பதற்கு இடையூறாக எதையும் செய்யாமல் இருக்க முயலுங்கள்.


உங்கள் குழந்தை அதிகாலை சீக்கிரமாக கண் விழித்து இரவு நெடும் நேரம் வரை படிப்பவர்களாக இருந்தால் அவர்களுடன் பெற்றோர்கள் நீங்களும் கண்விழித்திருங்கள், அவர்களைப் படிக்க ஊக்குவியுங்கள்.. அதேசமயம், அவர்களை தொல்லை செய்யாத வகையில் நல்ல தொலைவையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.


செரிமானமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்களை தேர்வு முடியும் வரை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாக தினமும் காலை குழந்தைகளுக்கு பாதாம் பருப்புகளை ஊற வைத்துக் கொடுங்கள்.. ஈஸியாக டைஜெஸ்ட் ஆகும் வகையிலான உணவுகளைப் பார்த்துக் கொடுங்க. 


குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை தூண்டும்  காய்கறிகள், கீரைகள், மற்றும் பழங்களை  உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களை அவ்வப்போது ரிலாக்ஸ்டாக இருக்கவும் பண்ணுங்க. 


தேர்வுகள் முடியும் வரை உறவினர் வீட்டுக்கு செல்வதையோ, உறவினர்கள் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுடன் அரட்டை அடிக்காமல், சிறிது நேரம் பேசிவிட்டு தேர்வின் முக்கியத்துவத்தை சொல்லி புரிய வையுங்கள்.


பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் பொது தேர்வுகள் முடியும் வரை இருவருக்குள்ளும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்து குழந்தைகளுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள்.


மாணவர்களே உங்கள் கவனத்திற்கு..




மாணவர்களே உங்கள் கவனம் முழுவதும் பொது தேர்வை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாளில் தேர்வு முடியப் போவதால் இந்த நாட்களை அதற்காக ஒதுக்குங்க.


விளையாட்டு, டிவி பார்ப்பது செல்போன்களில் சாட் பண்ணுவது, நண்பர்களுக்குள் அரட்டை அடிப்பது, போன்றவற்றை தேர்வு முடியும் வரை ஒதுக்கி வையுங்கள்.. தேர்வை முடித்து விட்டு ஜமாய்க்கலாம், இஷ்டம் போல.


மனதில் எழும் தவறான எண்ணங்களை ஒதுக்கி விட்டு, மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துங்கள். டீவியேஷன் ஆகாத மாதிரி பார்த்துக்கங்க.


ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள், சொல்லும் அறிவுரைகளை கேட்டு அவற்றில் நல்லதை எடுத்துக் கொண்டு செயல்படுத்துங்கள்.


படிப்பதற்கு டைம் டேபிள் போட்டுக்கொண்டு ஒரு நாளுக்கு என்ன படிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொண்டு படியுங்கள்.


படிக்கும் விடைகள் கடினமாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ மனதில் பதியாமல் இருந்தால் அதிகாலை எழுந்து ஒரு தடவைக்கு இருமுறை படித்து அதனை எழுதி பாருங்கள்.


தேர்வுக்கு முதல் நாளே தேர்வுக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து ஹால் டிக்கெட் ,பென்சில், ஒன்னுக்கு இரண்டு பேனாக்கள் மற்றும் உபகரணங்களை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


முதல் நாள் எழுதிய தேர்வில் சரியாக எழுதவில்லையே என்ற கவலை கொள்ளாமல் மறுநாளை வரும் தேர்வு களை சரியாக படித்து எழுத முயற்சி செய்யுங்கள்.


பொதுத்தேர்வு நேரங்களில் குரூப் ஸ்டடி என்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தாதீர்கள். ஏனென்றால் எப்படியும்  நண்பர்களுடன் பேச  தோன்றும்  அதற்கு பதிலாக படிப்பில் டவுட் வந்தால் போன் செய்து கேட்டுக் கொண்டு தனியாக படித்து பழகுங்கள்.




தேர்வால் (எக்ஸாம் பியர்) வரும் குழப்பங்களையும், பயங்களையும், தூக்கி எறிந்து விட்டு நீங்கள் படித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு தேர்வை எழுதுங்கள் தேர்வில் வெற்றி அடையலாம்.


தேர்வு ஹாலுக்குள் நுழைந்து வினாத்தாள்களை பெற்ற பின்னர், ஒரு தடவைக்கு இரண்டு முறை நன்றாக வாசித்து நிதானமாக பதில் எழுதுங்கள்.


தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் மிகவும் முக்கியம். ஏனென்றால் தேர்வு எழுதும் நேரங்களில் மாணவர்கள் அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் நேரத்தின் பயனை உணர்ந்து உங்களுக்குத் தெரிந்த விடைகளை சரியாக எழுதுங்கள்.


அப்புறம் என்ன மாணவர்களே கொடுக்கப்பட்ட டிப்ஸ்களை சரியாக பாலோ பண்ணி பொதுத்தேர்வுகளை நல்லபடியாக எழுதி ஜமாய்ங்க .தேர்வில் வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள் மாணவ/மாணவிகளே..!