US Deportation: அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.. மத்திய அரசு தகவல

Su.tha Arivalagan
Feb 07, 2025,08:00 PM IST

டெல்லி: அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கோரியுள்ளது.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அவர்களை கை, கால்களில் விலங்கிட்டு கொண்டு வந்ததால் பெரும் சர்ச்சையும் வெடித்தது.


எல்லா நாட்டவர்களையும் இப்படித்தான் அனுப்பி வைக்கிறோம், பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கிடுவதில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது. மத்திய அரசும் இதேபோன்ற ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியர்களை நாடு கடத்தவுள்ளது அமெரிக்கா. இந்த முறை அதிக அளவாக அதாவது 487 இந்தியர்களை அது அனுப்பி வைக்கவுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.




இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக அறிகிறோம். அவர்களை வெளியேற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது என்று கூறினார்.


மிஸ்ரி மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்படும் நாட்டவர்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் மிஸ்ரி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்