பார்வையற்றவர்களை பிரதிபலிக்கும்.. பார்பி பொம்மைகள்.. அமெரிக்காவில் அசத்தல் அறிமுகம்!
நியூயார்க்: பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வை திறன் கொண்டவர்களுக்கான பார்பி பொம்மையை அமெரிக்காவின் மேட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பொம்மைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் அழகு, வசீகர தோற்றம், பொசு பொசு உடலமைப்பு என அனைவரும் பொம்மைகளை ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான நண்பர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு குழந்தைகள் தனது வீட்டில் ஒருவராக பொம்மைகளை நினைக்கின்றனர். அதிலும் குறிப்பாக டெட்டி பியர் மற்றும் பார்பி பொம்மைகள் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று. அதனுடன் விளையாட ஆசைப்படுவார்கள்.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது பார்பி பொம்மைகள். 1959 ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் தேதி முதன் முதலில் அமெரிக்க நிறுவனத்தால் பார்பி பொம்மைகளின் வடிவமைப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நாள் பார்பி பொம்மைகளின் பிறந்தநாள் என்றும் கூறப்படுகிறது. இதன் தோற்றம் மற்றும் அழகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பொம்மைகளில் பார்பி பொம்மைகள் தனி சந்தை மதிப்பை பெற்றுள்ளன. குறிப்பாக பொம்மை உலகத்தில் 50 வருட காலமாக பார்பி பொம்மைகள் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பொம்மைகளின் ராணி என்றே பார்பியைச் சொல்லலாம்.
அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பார்பி ஃபேஷனில் கண் பார்வையற்ற பார்பி பொம்மையை வெளியிட்டுள்ளது மேட்டல் நிறுவனம் .இந்த பொம்மைகளை மேட்டல் அமெரிக்கன் ஃபவுண்டேஷன் ஃபார் தி பிளைண்ட் மற்றும் நேஷனல் டவுன் சிண்ட்ரோம் சொசைட்டி இணைந்து வடிவமைத்துள்ளனர். பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை கொண்ட குழந்தைகளின் தொடு உணர்வு எப்படி இருக்கும் என்ற வகையில் சோதனை செய்து மேட்டல் இந்த பொம்மையை உருவாக்கியுள்ளார். அதேபோல இதன் ஆடை வடிவமைப்பும் மிகத் துல்லியமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் கையில் பயன்படுத்தும் கம்புகளை வளைக்கும் தன்மை கொண்ட கைகளையும் பொம்மைகள் கொண்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய இளஞ்சிவப்பு பெட்டியில் வரும் இந்த பொம்மைகள், மார்ஷ்மெல்லோ ரோலர் முனையுடன் கூடிய சிவப்பு மற்றும் வெள்ளை கலர் காமினேஷனில் கம்பு மற்றும் ஒளி உணர்திறன் கொண்ட கண்களுக்கு ஏற்ற சன்கிளாஸ்கள் உட்பட அதன் சொந்த சிறப்பு பாகங்களைக் கொண்டுள்ளது. இந்த பார்பி பொம்மைகள் பார்வையற்றவர்களின் சமூகத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்கும், சந்தோஷிக்கும் உரிமை உண்டு.. அந்த வகையில் இந்த பார்பி பொம்மைகள் மிகப் பெரிய பாராட்டுக்கு தகுதியானவை.. மனதார பாராட்டலாம்.