நீயா நானா?... அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் - டொனால்ட் டிரம்ப் மோதல்

Su.tha Arivalagan
Mar 13, 2024,05:50 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் மோதவுள்ளார். அதேபோல குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.


ஜோ பிடன் மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு புதன்கிழமை அவரவர் கட்சிக்கான வேட்பாளர் நாமினேஷன் உறுதியானதைத் தொடர்ந்து, இருவரும் மோதுவது இறுதியாகி விட்டது.  இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.


மிஸ்ஸிஸிப்பி, வாஷிங்டன், ஜார்ஜியா மாகாணங்களில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் இருவருக்கும் தேவையான வாக்குகள் கிடைத்ததைத் தொடர்ந்து இருவரும் வேட்பாளர்களாக  உருவெடுத்தனர்.




அமெரிக்காவைப் பொறுத்தவரை இரு கட்சி முறை நிலவுகிறது. ஒன்று ஜனநாயகக் கட்சி, இன்னொன்று குடியரசுக் கட்சி. இவர்கள் தவிர சுயேச்சையாக சிலர் போட்டியிடுவார்கள். சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தனி நபர்களாகவே இருப்பார்கள். கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்றால் அந்தக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்க வேண்டும். யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவரே வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்.


மீண்டும் அதிபர் தேர்தலில் மோதப் போகும் ஜோ பிடனுக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் அதிபரான டிரம்ப்புக்கு 77 வயதாகிறது. டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனாலும் அவர் மீண்டும் அதிபராவதற்கு தீவிரமாக ஆர்வம் காட்டி வந்தார். தற்போது போட்டிக் களத்தில் பிடனுடன் மீண்டும் நேருக்கு நேர் நிற்கப் போகிறார்.


ஆசியர்களுக்கு ஏமாற்றம்:


இந்த அதிபர் தேர்தலில் ஆசிய பூர்வீகத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. காரணம், குடியரசுக் கட்சி சார்பில் விவேக் ராமசாமியும், நிக்கி ஹாலேவும் போட்டிக் களத்தில் இருந்தனர். இருவரும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர். இவர்களில் விவேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திடீரென அவர் ஜகா வாங்கி விட்டார்.. அவரைத் தொடர்ந்து நிக்கியும் விலகவே, இந்திய வம்சாவளியினர் ஏமாற்றமடைந்தனர்.